பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு ஆபத்தானது: முத்தரசன் 

சென்னை: பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்துவது ஆபத்தானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 வழக்கொழிந்து போக வேண்டிய வருணாசிரம, சனாதான கருத்தியலின் நவீன வடிவமைப்பு என்பதால் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை நிறுத்தி வைத்து, அது தொடர்பான வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்த வல்லுநர் குழு நீண்ட சில நூறு பக்கங்கள் கொண்ட அறிக்கையை பரிந்துரைகளுடன் வெளியிட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்வி நிலையில் ஆண்டுக்கு இரு பொதுத் தேர்வு என்ற புதிய தேர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரு முறை தேர்வில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதை மாணவர்கள் அடுத்த நிலைக்கு செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தாலும், உண்மையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டு, பட்டியலின பழங்குடி மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் நோக்கம் கொண்டதாகும். ஏற்கெனவே தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்து நடைமுறைப்படுத்தி வரும் “நீட்” தேர்வு காரணமாக ஆயிரக்கணக்கில் பயிற்சி மையங்கள் உருவாகி பணம் பறிக்கும் கும்பல் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. அதன் எதிர் விளைவாக அடித்தட்டு மக்களின் குழந்தைகளும். தேர்வு முறையால் அச்சப்பட்டு பதற்றமடையும் குழந்தைகளும் தற்கொலை சாவுக்கு நெட்டித் தள்ளப்பட்டு வருவதை தமிழ்நாடு கண்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக ஒன்றிய அரசு பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு என்று அறிவித்திருப்பது, கல்வித் துறையில் தொடர்ந்து நடத்தும் தாக்குதலாகும்.

இதில் அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ”பிற மொழிகளை (மாநில மொழி – தமிழ்நாட்டில் தமிழ்) தாய் மொழியாக கொண்டவர்கள் இந்தி மொழியை எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என்று அகங்காரத்துடன் பேசிய பேச்சுக்கு செயல் வடிவம் தரும் முயற்சியாகும். அரசின் வஞ்சகத் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.