'கேன்டிடேட்' செஸ் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றது மகிழ்ச்சி – தாயார் நாகலட்சுமி பேட்டி

பாகு,

அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ‘நம்பர் ஒன்’ வீரர் மாக்னஸ் கார்ல்செனிடம் (நார்வே) தோல்வியை தழுவினார். இதன் டைபிரேக்கரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற கார்ல்சென் அடுத்த ஆட்டத்தில் ‘டிரா’ செய்து முதல்முறையாக உலக் கோப்பையில் மகுடம் சூடினார்.

தோல்வி அடைந்தாலும் சர்வதேச செஸ் அரங்கில் ஜாம்பவனாக திகழும் கார்ல்செனுக்கு எதிராக பிரக்ஞானந்தா தைரியமாக போராடிய விதம் ரசிகர்களின் இதயங்களை தொட்டது. பாராட்டுகளும் குவிந்தன. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த போட்டியில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. அங்கிருந்து ஜெர்மனி சென்றுள்ள பிரக்ஞானந்தா வருகிற 30-ந்தேதி இந்தியா திரும்புகிறார்.

சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அவரது தாயார் நாகலட்சுமியும் உடன் சென்றுள்ளார். தந்தை மாற்றுத்திறனாளி என்பதால் பிரக்ஞானந்தாவை போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வது அவரது தாயார் தான். அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு நாகலட்சுமியின் பங்களிப்பு அளப்பரியது.

பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு நாகலட்சுமி அளித்த பேட்டி வருமாறு:-

உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா இந்த அளவுக்கு முன்னேறியதே மகிழ்ச்சி தான். அதை விட மேலாக அவர் டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு (இதில் வெற்றி பெறும் வீரர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் மோதுவார்) தகுதி பெற்றிருப்பதை பார்க்க இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. கடினமான கால்இறுதியில் அவர் வெற்றி கண்டதை பார்க்க பெருமையாக இருந்தது.

கால்இறுதி ஆட்டத்தை (அர்ஜூன் எரிகாசிக்கு எதிராக) ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். பிரக்ஞானந்தா எப்படி விளையாடுகிறார் என்ற சிந்தனை மட்டுமே எனது மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த காட்சியை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வைரலானது பிறகு தான் தெரியவந்தது. ஆனால் அவர்கள் போட்டோ எடுத்தது கூட அப்போது தெரியாது.

இறுதிப்போட்டிக்கு பிறகு இன்ப அதிர்ச்சியாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அது ஒரு சந்தோஷமான தருணம். இத்தனைக்கும் அவர் பேசும் போது, நள்ளிரவாகி விட்டது. அந்த நேரத்திலும் அவர் பிரக்ஞானந்தாவிடம் பேசி வாழ்த்து தெரிவித்து ஊக்கப்படுத்தினார். நானும் அவரிடம் பேசினேன். பல்வேறு பணிகளுக்கு மத்தியில் அவர் பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை ஆர்வமுடன் கேட்டறிந்தது சிறப்பானது.

இவ்வாறு நாகலட்சுமி கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.