நிலாவில் சிவசக்தி: லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் சூட்டிய மோடி: தேசிய விண்வெளி தினம் அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு அதிலிருந்து விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. அதன் பின்னர் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் இறங்கி நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரோவின் சாதனையை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்போது, தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருந்தார். அங்கிருந்தே இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் தொலைபேசி வழியே பேசி வாழ்த்து தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரதமர் மோடி நாடு திரும்பிய நிலையில் இன்று பெங்களூர் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு பெங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

“விண்கல வெற்றியின்போது, நான் தென் ஆப்பிரிக்க பயணத்தில் இருந்ததால், விஞ்ஞானிகளை உடனடியாக சந்திக்க முடியவில்லை. அதனால் நாடு திரும்பிய உடன், பெங்களூருவுக்கு வருகை தந்திருக்கிறேன். விஞ்ஞானிகளை சந்திக்க வருகிறேன் என்பதனால், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வரவேண்டாம் என கூறினேன். நான் பெங்களூருவுக்கு வரும்போது, முறைப்படி அரசு நடைமுறைகளை பின்பற்றினால் போதும் என கூறினேன்” என்று பேசினார்.

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

பெங்களூரில் இருந்து இஸ்ரோ செல்லும் வழியில் திரண்டிருந்த மக்களை நோக்கி பிரதமர் மோடி காரில் நின்றபடி கையசைத்தார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் பிற விஞ்ஞானிகள் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களை பிரதமர் மோடி பாராட்டினார். விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கி கூறினார்.

பிரதமர் மோடிக்கு விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து ப்ரக்யான் ரோவர் நிலவில் தடம் பதிக்கும் படத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழங்கினார். விக்ரம் லேண்டரின் மாதிரியை சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் வழங்கினார்.

சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தடம் பதித்த நாள், இனி தேசிய விண்வெளி தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவ் சக்தி’ என பிரதமர் மோடி பெயர் சூட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.