வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் மரணத்தில் மவுனம் கலைத்தார் அதிபர் புதின்

மாஸ்கோ,

ரஷியாவில் செயல்பட்டு வரும் தனியார் ராணுவ அமைப்பு வாக்னர் குழு. இதன் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின். இவர் கடந்த மாதம் அதிபர் புதின் அரசுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதன் மூலம் உலகின் கவனத்துக்கு வந்தார்.

இந்த சூழலில் கடந்த புதன்கிழமை ரஷியா தலைநகர் மாஸ்கோ அருகே நடந்த விமான விபத்தில் யெவ்ஜெனி பிரிகோஜின் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

வாக்னர் குழுவை சேர்ந்த 10 பேர் சென்ற விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10 பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிகட்டைகளாகிவிட்டன.

கொலை செய்யப்பட்டாரா?

விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியலில் யெவ்ஜெனி பிரிகோஜின் பெயரும் இருப்பதால் அவரும் விபத்தில் பலியானதாக நம்பப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இதனிடையே யெவ்ஜெனி பிரிகோஜின் புதின் அரசுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க விபத்து நடந்த பகுதியில் இருக்கும் உள்ளூர் மக்கள் விமானம் தரையில் விழுவதற்கு முன்பு குண்டு வெடித்ததுபோல சத்தம் கேட்டதாக செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

அதேபோல் விமானம் வெடிக்க வைக்கப்பட்டது தங்களது முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறையும் கூறியுள்ளது.

திட்டவட்டமாக மறுப்பு

இதற்கு முன்னரும் புதின் எதிர்ப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பலர் வெளிப்படையான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொலை முயற்சிக்கு ஆளாகி கடுமையான நோய் வாய்ப்பட்டுள்ளனர்.

இதனால் யெவ்ஜெனி பிரிகோஜின் விவகாரத்தில் பல்வேறு தரப்பில் எழுப்பப்படும் சந்தேகங்கள் உண்மையாக இருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில் யெவ்ஜெனி பிரிகோஜின் பலியானதாக கூறப்படும் விமான விபத்தின் பின்னணியில் சதி இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை புதின் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அனைத்தும் பொய்

இது குறித்து அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில் “யெவ்ஜெனி பிரிகோஜின் உட்பட விமான பயணிகளின் துயர மரணம் பற்றி நிறைய யூகங்கள் உள்ளன.

அந்த யூகங்கள் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வெளியிடப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றிலும் பொய் என்றார்.

மவுனம் கலைத்த புதின்

இந்த நிலையில் யெவ்ஜெனி பிரிகோஜின் பலியானதாக கூறப்படும் விமான விபத்து தொடர்பாக மவுனம் காத்து வந்த அதிபர் புதின் முதல் முறையாக அது குறித்து பேசினார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

விமான விபத்தில் பலியானவர்கள் உக்ரைன் போரில் கணிசமான பங்களிப்பை செய்துள்ளனர். நாங்கள் இதை நினைவில் கொள்கிறோம், ஒருபோதும் அவர்களை நாங்கள் மறக்கமாட்டோம்.

இவ்வாறு புதின் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.