நூ: ஹரியணாவின் நூ மாவட்டத்தில் இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இன்று ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இருந்த போதும் ஊர்வலத்தை நடத்துவோம் என்று அந்த அமைப்பினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளிகளுக்கு, வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் போலீஸ் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 30 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ரோந்து வாகனங்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
6 பேர் பலியான வன்முறை: முன்னதாக, கடந்த ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊர்வலத்தின்போது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு 2 சமூகத்தினரிடையே மதக் கலவரம் மூண்டு பெரிய கலவரமாக மாறியது.
இந்தக் கலவரம் அருகிலுள்ள குருகிராம் மாவட்டம் சோனா நகருக்கும் பரவியதால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
ஏற்கெனவே, சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு கருதி நூ மாவட்டத்தில் செல்போன் இணைய சேவை மற்றும் மொத்தமாக அனுப்பும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு 2 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 28) நள்ளிரவு 12 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என்று நூ மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.