அரசு பல்கலைகளுக்கான துணை வேந்தர்கள் நியமனத்தில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., விதிகளை பின்பற்றுமாறு, கவர்னர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, பல்கலைகளின் சட்ட விதிகளை திருத்த, அரசு முன்வராமல் உள்ளதால், சென்னை பல்கலை உள்பட, மூன்று பல்கலைகளுக்கு, புதிய துணை வேந்தர்களை தேர்வு செய்யும் பணிகள் முடங்கியுள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகளின் துணை வேந்தர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர். துணை வேந்தருக்கான தேடல் குழுக்களை, கவர்னர் அலுவலகம் அமைக்கிறது. இந்த குழுவில், பல்கலைகள், அரசு மற்றும் கவர்னரின் பிரதிநிதிகள் இடம் பெறுகின்றனர்.
இதையடுத்து, தேடல் குழு உறுப்பினர்கள் கூடி, தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவற்றில், 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, கவர்னர் முன்னிலையில் நேர்முக தேர்வு நடத்தப்படும். அதில், மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவர் துணை வேந்தராகிறார். மேலும், தேடல் குழுக்களின் பரிந்துரை பட்டியலில், ஆட்சியாளர்களுக்கு சாதகமான அல்லது ஆளும் கட்சியினரின் சிபாரிசு பெற்றவர்களே பெரும்பாலும் இடம் பெற்று
வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர், துணை வேந்தராகும் போது, பல்கலை நிர்வாகத்தில், அரசுக்கும், ஆளுங்கட்சிக்கும் சாதகமான முடிவுகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாக இருந்துள்ளது.
யு.ஜி.சி., புதிய விதி
இந்நிலையில், துணை வேந்தர்கள் நியமனத்தில், யு.ஜி.சி., உறுப்பினரும் இடம்பெற வேண்டும் என, புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம்: சிறந்த கல்வித்தரம், நேர்மை, ஒழுக்கம் மற்றும் கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் அர்ப்பணிப்பு உள்ளவர்களையே துணை வேந்தர்களாக நியமிக்க வேண்டும் பல்கலை அல்லது கல்வி சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களில், குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் பேராசிரியர் நிலையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்
* தேடல் குழுவில், மூன்று முதல் ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அவர்களை பொது அறிவிப்பு செய்தோ, நியமனம் வழியாகவோ தேர்வு செய்யலாம்
*தேடல் குழுவில் உள்ளவர்கள், சிறந்த கல்வியாளர்களாக, நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும்
*உறுப்பினர்களில் ஒருவர், யு.ஜி.சி., தலைவரால் நியமிக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும், பல்கலையின் விதிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு யு.ஜி.சி., கூறியுள்ளது.
அரசு பிடிவாதம்
இந்த விதிகளின்படி, யு.ஜி.சி., சார்பில் ஒரு பிரதிநிதியை, தேடல் குழுவில் நியமிக்க வேண்டும் என, உயர் கல்வித் துறையை, கடந்த ஆண்டு கவர்னர் அலுவலகம் அறிவுறுத்தியது.
இதன்படி, கவர்னரின் பிரதிநிதி மட்டுமின்றி, யு.ஜி.சி., உறுப்பினர் ஒருவரையும், தேடல் குழுவில் கூடுதலாக இணைத்து, உயர் கல்வித் துறை சார்பில் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
அவ்வாறு கூடுதல் உறுப்பினரை சேர்க்க, சட்டத்தில் இடமில்லை எனக்கூறி, தமிழக அரசு மறுத்து வருகிறது. இதனால், சென்னை பல்கலை, பாரதியார் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைகளுக்கான துணை வேந்தர் தேர்வு பணிகள் முடங்கியுள்ளன.
இதற்கிடையே, துணை வேந்தர்களை கவர்னருக்கு பதிலாக, அரசே நியமிக்க வகை செய்யும் மசோதா, சட்டசபையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.
தற்போதைய நிலவரம்
* கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தர் காளிராஜ் பதவிக் காலம், கடந்த ஆண்டு அக்டோபரில் முடிந்தது. ஒன்பது மாதமாக பதவி காலியாக
உள்ளது. கடந்த அக்டோபரில், இந்த பல்கலைக்கு தேடல் குழு அமைக்கப்பட்டது குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார், முன்னாள் துணை வேந்தர்கள் துரைசாமி, திருவாசகம் இடம் பெற்றுள்ளனர்.
*ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தராக இருந்த பஞ்சநாதத்தின் பதவிக் காலம், கடந்த நவம்பரில் முடிந்தது. எட்டு மாதங்களாக பதவி காலியாக உள்ளது. அக்டோபர் இறுதியில் தேடல் குழு அமைக்கப்பட்டது.
இதில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன், முன்னாள் துணை வேந்தர் பத்மநாபன் மற்றும் யு.ஜி.சி., உறுப்பினர் சுஷ்மா யாதவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த இரு குழுக்களிலும், யு.ஜி.சி., சார்பிலான உறுப்பினர் சேர்ப்பும், ‘நோடல் ஆபீசர்’ எனப்படும், ஒருங்கிணைப்பு அதிகாரி நியமனமும் தாமதமானதால், பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை
* சென்னை பல்கலை துணை வேந்தர் கவுரியின் பதவிக் காலம், இந்த மாதம், 20ம் தேதி முடிந்தது. இந்த பல்கலைக்கு இன்னும் தேடல் குழுவே அமைக்கப்படவில்லை.
அனுமதி தராதது ஏன்?
அரசு பல்கலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. அந்த சட்டங்களின்படி, விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன்படியே, தேடல் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
தற்போது, யு.ஜி.சி., அறிவுறுத்தலின்படி, தேடல் குழுவில் யு.ஜி.சி., உறுப்பினரை கூடுதலாக நியமிக்க, சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
சட்ட திருத்தத்தை பின்பற்றி, அனைத்து பல்கலைகளின் விதிகளிலும் திருத்தம் செய்து, சிண்டிகேட் மற்றும் செனட் குழு கூட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். அந்த ஒப்புதலின்படி, தேடல் குழுவில், கூடுதல் பிரதிநிதியை
கவர்னர் அனுமதிப்பார்.தமிழக அரசு இதற்கான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள முன்வராமல் உள்ளதால், தேடல் குழுக்களின் பணிகளை துவங்க, கவர்னர் இன்னும் அனுமதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாதகமான விதிகள்
சென்னை பல்கலை தேடல் குழுவில், சிண்டிகேட், செனட் சார்பில் தலா ஒரு பிரதிநிதியும், கவர்னர் தரப்பில் ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்படுவர். இதில், அரசு தரப்பு பிரதிநிதி இடம் பெறுவதில்லை. ஆனால், சிண்டிகேட் மற்றும் செனட் பிரதிநிதிகள் பெரும்பாலும், அரசு தரப்பில் செல்வாக்கு பெற்றவர்களாக இருப்பது வழக்கம்.
கோவை பாரதியார் பல்கலைக்கு, சிண்டிகேட், செனட் சார்பில், தலா ஒரு பிரதிநிதியும், அரசு தரப்பில் ஒரு பிரதிநிதியும், தேடல் குழுவில் இடம்பெறுவர். கவர்னர் தரப்பில், பிரதிநிதி இடம் பெறுவதில்லை.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு, அகாடமிக் கவுன்சிலுடன் இணைந்த சிண்டிகேட் சார்பில், ஒரு பிரதிநிதி; அரசு மற்றும் கவர்னர் தரப்பில், தலா ஒரு பிரதிநிதி இடம்பெறுவர்.தேடல் குழு உறுப்பினர்களில் பலர், நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசின் செல்வாக்கு பெற்றவர்களாகவே இருக்கின்றனர். அதனால், இவர்களது பரிந்துரை பட்டியலிலும், அரசின் சிபாரிசு பெற்றவர்களே இடம்பெறும் நிலை உள்ளது.தற்போது யு.ஜி.சி., விதிப்படி, நான்கு பேர் தேடல் குழுவில் இடம்பெற்றால், உறுப்பினர்களில் இருவர், அரசுக்கு சாதகமானவர்களாகவும், மற்ற இருவர், கவர்னர் அல்லது எந்த சார்பும்
இல்லாதவராக இருக்க வாய்ப்புள்ளது.அப்போது, துணை வேந்தர் தேர்வில், ஒரு சார்பு நிலை தவிர்க்கப்படும் என, கூறப்படுகிறது.
அரசு கட்டுப்பாட்டில் 3 பல்கலைகள்!
தற்போதைய நிலையில், பாரதியார் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைகளுக்கு, துணை வேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டாலும், அவற்றின் பணிகள் துவங்கவில்லை. சென்னை பல்கலைக்கு தேடல் குழுவே அமைக்கப்படவில்லை. இந்த நிலைமையை, ஆளும் தி.மு.க., அரசு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது.
அதாவது, துணை வேந்தர் நியமிக்கப்படும் வரை, உயர் கல்வித் துறையின் செயலரை தலைவராக கொண்ட, தற்காலிக நிர்வாக கமிட்டியே, பல்கலைகளின் நிர்வாகத்தை மேற்கொள்ளும். இந்த நடைமுறையின்படி, துணை வேந்தர் இல்லாத மூன்று பல்கலைகளின் நிர்வாகங்களை, அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
நிர்வாகம் தங்கள் வசம் உள்ளதால், பல்கலை முடிவுகளை, உயர் கல்வி செயலரே நேரடியாக மேற்கொள்ள முடிகிறது. துணை வேந்தருக்கு பதில், உயர் கல்வித் துறை செயலரே சிண்டிகேட், செனட் மற்றும் அகாடமிக் கவுன்சில் கூட்டங்களை நடத்த முடியும் என்பதால், துணை வேந்தர் நியமனம் காலதாமதமாகியிருப்பது அரசுக்கு சாதகமாக மாறியுள்ளது.
மாற்றம் தேவை!
பல பல்கலைகளுக்கான துணை வேந்தர்கள் நியமனத்தில், பல்வேறு குற்றச்சாட்டுகள், கடந்த காலங்களில் கூறப்பட்டன. உரிய தகுதியில்லாத
பேராசிரியர்கள் கூட, ஏதோ செல்வாக்குகளால், துணை வேந்தர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதனால், பல்கலைகளின் நிர்வாகமும் மோசமானது. எனவே, மாணவர்கள் மற்றும் கல்வி
நலனில் அக்கறை உள்ளவர்கள், பாரபட்சமின்றி செயல்படுவோரை, துணை வேந்தர்களாக நியமிப்பதே சிறந்தது. அதற்கு தேவைப்பட்டால் சட்ட விதிகளை மாற்றியாக வேண்டும்.- தேவ.சீத்தாராமன், முன்னாள் முதல்வர், ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி, சென்னை
மற்றும் காஞ்சிபுரம்.
தாமதம் வேண்டாம்!
எங்களை பொறுத்தவரை, துணை வேந்தர்கள் நியமனங்களில் காலம் தாழ்த்தாமல் தேடல் குழு செயல்பட வேண்டும். கவர்னர் அலுவலகமும், அரசும் இணைந்து, இந்த விவகாரத்தை இன்னும்
தாமதிக்காமல் தீர்வு காண வேண்டும். தேவைப்பட்டால் சட்ட விதிகளை திருத்தலாம். அதற்காக, நீண்ட காலம் துணை வேந்தரையே தேர்வு செய்யாமல் இருப்பது, பல்கலை நிர்வாகம் மற்றும் மாணவர்களின் கல்வி
நலனிலும், நிதி மேலாண்மையிலும், பாதிப்பை ஏற்படுத்தும்.- பெ.திருநாவுக்கரசு, மாநில துணைத் தலைவர், பல்கலை ஆசிரியர் சங்கம் – ஏ.யு.டி.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்