மும்பை: வருமான வரி அமைப்பில் 2047-ம் ஆண்டுக்குள் மேலும் 41 கோடி இந்தியர்கள் இணைவர் என எதிர்பார்க்கப்படுவதாக மும்பையில் நேற்று நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2023 நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய பொருளாதாரம் மிகபரந்தளவில் முறைப்படுத்தப்பட் டுள்ளது என்பதை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வருமான வரி தரவு வெளிக்காட்டியுள்ளது. வருமான வரித் தாக்கலில், ஒவ்வொரு வரம்பும் குறைந்தது 3 மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரித் தாக்கலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.
2047-ம் ஆண்டில் மக்கள் தொகையில் தொழிலாளர்களின் பங்கு 45 சதவீதமாக உயரும். இதில் வரி செலுத்தும் தொழிலா ளர்கள் தற்போதுள்ள 22.5 சதவீதத் திலிருந்து 85.3 சதவீதமாக உயரும். வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தற்போது 7 கோடியாக உள்ளது. இது 2047-ம் ஆண்டு 48.2 கோடியாக இருக்கும்.
டிஜிட்டல் அறிவில் சில நாடுகள் சிறந்து விளங்குகின்றன. சில நாடுகள் பின்தங்கியிருக்கலாம். நிதி உள்ளடக்கத்தில் இந்தியா முதல் அடியை எடுத்து வைத் துள்ளது. இந்தியாவின் தொலை தூர நகரங்களிலும் நிதி புரட்சி சென்றடைந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித் துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 4.2 கோடி பேர் டீமேட் கணக்கு வைத்திருந்தனர். தற்போது 10 கோடி பேர் டீமேட் கணக்கு வைத்துள்ளனர். பரஸ்பர நிதி முதலீடு மற்றும் பங்கு முதலீடுகளில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் பரஸ்பர நிதி தொழிலில் இதுவரை இல்லாத அளவில் ரூ.15,245 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஏழ்மையை ஒழிக்க உலக மயமாக்கல் உதவியது. தற்போது உலகமயமாக்கல் குறித்து கேள்வி எழுப்பும் நேரத்தில் நாம் பொறுப்பான நிதி சூழல் குறித்து பேசுகிறோம். கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்துவது, வரி ஏய்ப்பை சமாளிப்பது, உலகளாவில் கடன் வசதி முறையை எளிதாக்குவது ஆகியவற்றில் கூட்டுமுயற்சி தேவை. இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.