50 ஓவர் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.
இதற்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துவிட்டது. 2011க்குப் பிறகு கோப்பையை வென்று தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் சரித்திரம் படைக்குமா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், போட்டிகளைக் காண்பதற்கான டிக்கெட்டுகளை புக் செய்வதில் ஏகப்பட்ட சிரமங்களை ரசிகர்கள் சந்தித்து வருகின்றனர். டிக்கெட் விற்பனை தொடங்கிய உடனே ‘Sold Out’ என வந்துவிடுவதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்திருந்தனர். தொடர்ந்து சமூகவலைதளங்களில் பிசிசிஐ மீதும் டிக்கெட் விற்பனைத் தளமான ‘புக் மை ஷோ’ மீதும் ரசிகர்கள் புகார்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

டிக்கெட் விற்பனை விவகாரம் பூதாகரமானதால், பிசிசிஐ புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, அடுத்தக்கட்டமாக 4 லட்சம் டிக்கெட்டுகளுக்கான விற்பனை செப்டம்பர் 8 முதல் தொடங்கும் என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று டிக்கெட் விற்பனையும் தொடங்கியது. ஆனாலும் கடந்த முறையைப் போன்றே இந்த முறையும் டிக்கெட் புக் செய்வதில் ரசிகர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த முறையும் உடனே ‘Sold Out’ என வந்தது. இந்நிலையில் டிக்கெட் விற்பனை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
“இந்தியாவில் நடைபெறவுள்ள டிக்கெட்டுகளை பகுதி பகுதியாக ரிலீஸ் செய்து விற்கப்படும் முறை சரியில்லை. டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இணையவழியில் டிக்கெட் விற்பனையை முறையாக கையாளத் தெரியவில்லை. டிக்கெட் வெளியிடுகிறோம் என்ற பெயரில் நடைபெறும் மற்றொரு கண்துடைப்பு இது.

எதன்வாயிலாக எப்படி, யாரிடம், எல்லா டிக்கெட்டுகளும் விற்கப்படுகின்றன என்பது குறித்து விரிவான தணிக்கை மேற்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் முக்கிய அங்கமான ரசிகர்களை பொய் உத்திரவாதங்கள் கொடுத்து ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆசியக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டது குறித்தும் வெங்கடேஷ் பிரசாத் காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.