வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆப்ரிக்க யூனியன் தலைவர் அசாலி அசோவுமணி ஆகியோரும் மோடியை சந்தித்தனர்.
டில்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வந்துள்ளார். ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், மாநாடு முடிந்த பிறகு இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பேட்டி
இதனிடையே, ஜி20 மாநாடு தொடர்பாக மேக்ரான் கூறியதாவது: டில்லியில் நடந்த ஜி20 மாநாடு ஒற்றுமைக்கான செய்தியை அனுப்பி உள்ளது. உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட மாநாடு உறுதிபூண்டுள்ளது. நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமையை உறுதி செய்வது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. உலகத்தின் தற்போதைய நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

ஜி20 என்பது அரசியல் ஆலோசனைக்கான குழு மட்டும் அல்ல. இந்த அமைப்பில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்துள்ளது. இந்த சிக்கல்களில் மட்டும் சிக்கிக் கொள்ளக்கூடாது.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை இன்னும் அதிகரிப்போம். தற்போதைய குழுப்பமான சூழ்நிலையில், ஜி20 மாநாட்டை இந்தியா சிறப்பாக நடத்தி உள்ளது. இவ்வாறு மேக்ரான் கூறினார்.
கனடா பிரதமர்

இதனைத் தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆப்ரிக்க யூனியன் தலைவரும், கொமொரோஸ் அதிபருமான அசாலி அசோவுமணியும் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement