தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் நாசர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதுமே, ‘நடிகர் சங்கத்தின் இடம் மீட்கப்பட்டு கட்டடம் கட்டப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.
எப்போது கட்டடப் பணிகள் நிறைவடையும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் கூட்டம் முடிந்ததும் அதுகுறித்துப் பேசியிருக்கின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “அன்னைக்கு அந்தத் தேர்தல் நடக்கலைன்னா கண்டிப்பா எங்கள் கட்டடத்துல இந்த பொதுக்குழு நடந்திருக்கும். பரவாயில்லை, கூடிய சீக்கிரம் அது நடக்கும். அதுக்கான ஒப்புதல் கொடுத்து இருக்காங்க. உறுப்பினர்கள் இரண்டாவது முறை எங்களைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம், ‘அவங்களுக்கு எங்க மேல இருக்குற நம்பிக்கைதான்’.
அந்த நம்பிக்கை வீண் போகாம அதுக்காக கடைசி வரைக்கும் பாடுபடுவோம். அவங்களோட கடைசி கோரிக்கை நடிகர் சங்கம் கட்டடம் மட்டும் தான், மீதி எல்லாத்தையும் நாங்கள் நிறைவேத்திட்டோம். அந்த கடைசி கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் நாங்கள் எல்லாரும் ஈடுபடுகிறோம். கூடிய சீக்கிரம் கண்டிப்பா ஒரு நல்ல செய்தி வரும்.

அடுத்த ஆண்டிற்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதைத் தாண்டி நிறையச் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், எங்களுக்கு இருக்கிற ஒரே பிரச்னை நிதிதான்” என்று கூறினார். இதற்கு முன்னதாக நடைபெற்ற நடிகர் சங்கப் பொதுக்கூட்டத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். கட்டிட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தி விளக்கம் அளித்தார்.