கண்காணிப்பு கேமரா வந்த பிறகு, திருட்டு போன்ற குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. திருடர்கள் திருடுவதற்கு வந்து எதுவும் கிடைக்காமல் கோபத்தில் எதையாவது உடைத்து போட்டுவிட்டுச் செல்லும் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். அந்த வகையில் குஜராத் மாநிலம், மொடாசா என்ற இடத்தில் இருக்கும் டிராக்டர் ஷோரூம் ஒன்றுக்கு நேற்று இரவு திருடன் ஒருவன் வந்தான். ஷோரூம் காம்பவுண்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றை திருடன் திருடுவதற்காக ஸ்டார்ட் செய்தான். நீண்டநேரமாக வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று பார்த்தான். கடைசி நேரத்தில்தான் வண்டி ஸ்டார்ட்டானது. திருடன் வண்டியின் பின்புற டயர் அருகில் கீழே நின்று கொண்டு ஸ்டார்ட் செய்ய முயன்றான்.

அந்நேரம் எதிர்பாராதவிதமாக டிராக்டர் தானாகவே நகர ஆரம்பித்தது. வண்டியின் டயர் அருகில் நின்றதால் டிராக்டர் அவன்மீது மோதி, மேலே ஏறி இறங்கியது. ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக டிராக்டர் ஏறி இறங்கிய பிறகும், திருடன் மீண்டும் எழுந்தான். அவன் நேராக டிராக்டரில் ஏறி அமர்ந்து வண்டியை சர்வசாதாரணமாக ஓட்டிச் சென்றுவிட்டான். இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
હઠીલો ચોર: મરતાં મરતાં બચ્યો પણ ટ્રેકટર ચોરી ગયો, મોડાસાના હજીરા વિસ્તારની ઘટના#Modasa #THIEF #tractor #viralvideo #gujaratfirst pic.twitter.com/crxtI0FrFt
— Gujarat First (@GujaratFirst) September 10, 2023
இது குறித்து கடை உரிமையாளர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். 5 நாள்கள் விசாரணை நடத்தி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் டிராக்டரை திருடியவன் கைதுசெய்யப்படவில்லை. அவனை போலீஸார் தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.