Ashokselvan: `தமிழ் மரபுத் திருமணத்துக்காகவே அரசமரம் வளர்த்திருந்தாங்க!' – கு.ஞானசம்பந்தன்

நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் இன்று திருநெல்வேலி அருகே நடந்த திருமணத்தைத் தமிழர் திருமண மரபுப்படி நடத்தி வைத்திருக்கிறார் பட்டிமன்ற நடுவரும் பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன்.

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்

அவரிடம் பேசினோம். “தமிழர் மரபுத் திருமணங்களை நடத்த சமீபமா பலரும் ஆர்வம் காட்டிட்டு வர்றாங்க. இதுவரை நானே சுமார் 500 கல்யாணங்களை நடத்தி வச்சிருப்பேன். ‘தமிழர் மரபுக் கல்யாணம்கிறது ஒரு கல்யாணத்தின் போது மேடையில என்ன நடக்குது, அதுக்கு என்ன அர்த்தம்ங்கிறது மணமக்கள், அந்தக் கல்யாணத்துக்கு வந்திருந்தவங்கன்னு எல்லோருக்கும் எளிமையா புரியுற மாதிரி இருக்கும். இந்த வகையான கல்யாணம் பஞ்சமுக விளக்கேத்துறதுல இருந்து தொடங்கும். பெண்கள் வந்து விளக்கேத்திட்டு தேவாரம், திருவாசகத்தைப் பாடுவாங்க.

கல்யாணத்தை நடத்தி வைக்கிறவர் மேடையில நடக்கறதை வர்ணனை செய்வார். அந்தக் கலாத்துல நிறைய பிள்ளைகளைப் பெற்ற பெண்களே தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வச்சிருக்காங்க. அருண் பாண்டியன் வீட்டுக் கல்யாணத்தப் பொறுத்தவரைக்கும், இப்படி நடத்தணும்னு அசோக் செல்வனின் அம்மா என்னைத் தொடர்பு கொண்டு கேட்டாங்க. அவங்க நான் இந்த மாதிரித் திருமணங்களை நடத்தி வச்ச வீடியோக்களைப் பார்த்திருக்காங்க.

இப்படியொரு மரபுல கல்யாணம் செய்யணும்னு ரெண்டு வீட்டுக்காரங்களும் பேசி முடிச்சதுமே அருண் பாண்டியன் வீட்டார் இயற்கை சார்ந்த சூழல்ல, அதாவது அவங்க பண்ணையிலயே நடத்தலாம்னு முடிவு செய்தது இன்னும் சிறப்பா இருந்தது.

பொதுவா இந்த மாதிரிக் கல்யாணங்கள்ல அரச மரக் குச்சியை மண மேடைக்குக் கொண்டு வந்து அந்தக் குச்சிக்குக் காப்பு கட்டுவாங்க. முற்காலத் தமிழகத்துல அரசமரத்தடியிலதான் கல்யாணங்கள் நடந்திருக்கின்றன.

கு.ஞானசம்பந்தன்

இந்த அரசமரக் கொம்புக்குப் பின்னாடி இன்னொரு அடையாளமும் இருக்கு. அதாவது அரசர்களைக் குடிமக்கள் தங்களது வீட்டுக் கல்யாணத்துக்கு அழைத்ததாகவும் அரசர் தன்னுடைய அடையாளமாக அவர்கள் பயன்படுத்தும் தடி போன்ற ஒரு பொருளை அனுப்பி வச்சதாகவும் வரலாறுகள்ல சொல்லப்பட்டிருக்கு.

அருண்பாண்டியன் பண்ணை வீட்டுல அரச மரமே இருந்தது ரொம்பவே சிறப்பா இருந்தது.விசாரிச்சப்ப, இப்படியொரு திருமணத்துக்காகவே அரச மரத்தை நட்டு வளர்த்திருந்ததாச் சொன்னாங்க.

மணமக்கள் மேடைக்கு வந்ததும் இருவரது தாய்மாமன்களும் வந்து அவர்களுக்குத் திருமணத்துக்கான உடைகளைத் தர்றது, தொடர்ந்து மணமக்கள் அவர்களது பெற்றோருக்குப் பாத பூஜை செய்வதுனு சில சடங்குகள்.

இந்தச் சடங்குகள் ஏன் செய்யப்படுதுன்னு விளக்கத்தை நான் சொல்லிட்டே வந்தேன்.

முகூர்த்த நேரம் நெருங்கியதும், அட்சதையை எல்லோருக்கும் கொடுக்கும் போதே ‘இருந்த இடத்துல இருந்தே எறியாதீங்க’ன்னு தெளிவாச் சொல்லிட்டேன்.

கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்

ஏன்னா, இன்னைக்கு எந்தக் கல்யாணம்னாலும் பாதிப் பேருக்கு மேல பொண்ணு மாப்பிள்ளை தலையில போடறதுக்குப் பதிலா முன்னாடி இருக்கறவங்க மேலதான் போடுறாங்க.

அதனால தாலி கட்டி முடிஞ்சதும் மண மக்கள் அரங்கத்தைச் சுத்தி ஒரு ரவுண்டு வருவாங்க. அப்ப வாழ்த்துங்கன்னு சொல்லிட்டோம்.

மணமக்களை 90 வயதைத் தாண்டிய அருண்பாண்டியனின் தந்தை ஆசீர்வதிக்க, திருமணம் சிறப்பா முடிஞ்சது” என்றார் கு.ஞானசம்பந்தன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.