'தற்போதைய தருணத்தில் ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை' – சாய்னா நேவால் பேட்டி

புதுடெல்லி,

பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் அலங்கரித்தார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியா மாஸ்டர்சுக்கு பிறகு எந்த பட்டமும் வெல்லவில்லை. கடைசியாக கடந்த ஜூன் மாதம் போட்டியில் பங்கேற்ற சாய்னா முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடுகிறார். தற்போது உலகத் தரவரிசையில் 55-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள 33 வயதான சாய்னா நேவால் டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“ஒன்று அல்லது 2 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டாலே எனது முழங்காலில் வீக்கம் வந்து விடுகிறது. அதன் பிறகு காலை மடக்கி பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. டாக்டர்கள் வீக்கத்துக்கு ஊசி போட்டும் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. முடிந்த வரை மிகச்சிறப்பான நிலையை எட்டி பேட்மிண்டன் களத்திற்கு திரும்ப முயற்சிக்கிறேன். எனது உடல்தகுதி நிபுணர் எனக்கு உதவிகரமாக இருக்கிறார். ஆனால் வீக்கம் குறையாவிட்டால் பழைய நிலைக்கு திரும்புவதற்கு மேலும் நாட்கள் பிடிக்கும். அரைகுறை உடல்தகுதியுடன் விளையாட விரும்பவில்லை. அன்சே யங் (தென்கொரியா), தாய் ஜூ யிங் (சீனதைபே), அகானே யமாகுச்சி (ஜப்பான்) போன்ற முன்னணி வீராங்கனைகளுக்கு எதிராக அவர்களுக்கு நிகராக விளையாட வேண்டும் என்றால் வெறும் ஒரு மணி நேரம் பயிற்சி எல்லாம் போதாது. மிக உயரிய அளவில் முன்னேற்றம் காண வேண்டும்.

எனவே முதலில் கால் வீக்கம் பிரச்சினையை முழுமையாக சரி செய்ய வேண்டும். அதன் பிறகு விளையாடுவது எளிதாகி விடும். மேற்கொண்டு சிறு சிறு காயங்கள் ஏற்படாதவாறு உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது ரொம்ப முக்கியம். எனது பிசியோவும், டாக்டரும் என்னை நல்லநிலைக்கு கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நெருங்கி விட்டதால் அதற்கு தகுதி பெறுவது (தரவரிசையில் முதல் 16 இடத்திற்குள் இருக்க வேண்டும்) நிச்சயம் கடினம் தான்.

ஓய்வு குறித்து கேட்கிறீர்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நாளில் ஓய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும். இதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது. உங்களது உடல் ஒத்துழைக்காத போது ஆட்டத்தை நிறுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் தற்போதைய தருணத்தில் ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை. ஒரு வீராங்கனையாக முடிந்த வரை சீக்கிரம் களம் திரும்ப முயற்சிக்கிறேன்.

ஒரு மாற்றமாக பி.வி.சிந்து பெங்களூருவில் உள்ள பிரகாஷ் படுகோனே அகாடமியில் ஒரு வாரம் பயிற்சி எடுக்கிறார். சில சமயம் பயிற்சியாளரை மாற்றும் போது அது நமக்கு அனுகூலமாக அமையும். நானும் இதே போல் பயிற்சியாரை மாற்றிய போது இழந்த பார்மை மீட்டு இருக்கிறேன்.”

இவ்வாறு சாய்னா கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.