மழை பாதிப்பால் உருக்குலைந்த இமாச்சல்; வாழ்நாள் சேமிப்பை மீட்புப் பணிகளுக்காக வழங்கிய முதல்வர்!

இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெரும் சீற்றத்துடன் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. பலி எண்ணிக்கை 260-ஐ தாண்டியிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் இடிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். மேலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல சாலைகள் இன்னும், பாதிப்படைந்து பயன்பாட்டுக்குவரவில்லை.

இமாச்சல் மழை வெள்ளம்

இந்த நிலையில், நிவாரணப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி தேவை என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இமாச்சலப் பிரதேச அரசு `ஆப்தா ரஹத் கோஷ்’ என்ற பெயரில் பேரிடர் நிவாரண நிதிக் குழு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிவாரணக் குழுவுக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது மூன்று சேமிப்புக் கணக்குகளிலிருந்த வாழ்நாள் சேமிப்பான ரூ.51 லட்சத்தை `ஆப்தா ரஹத் கோஷ்’-க்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமீபத்திய பருவமழைக்கு 260-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி, பலர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டதோடு, பெரும் இழப்பையும் சந்தித்திருக்கிறோம். மக்களின் வலியையும் அவர்களின் அவலத்தையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. கஷ்டங்களை எதிர்கொள்பவர்களுக்கு உதவுவதற்காக குழந்தைகள்கூட தங்கள் உண்டியல் சேமிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சுக்விந்தர் சிங் சுகு நன்கொடை

மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை தியாகம் செய்கிறார்கள். மாநில அரசு ஊழியர்கள் தாராளமாக தங்கள் சம்பளத்திலிருந்து பேரழிவு நிவாரண நிதிக்கு பங்களிக்கின்றனர். நிவாரண நிதிக்கு ஆதரவளிக்க சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் மனமுவந்து நன்கொடைகளை வழங்கிவருகிறார்கள்.

இமாச்சலப் பிரதேசத்தின் நிலையை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். இமாச்சலப் பிரதேசத்துக்காக கோயில் அறக்கட்டளைகள், அரசு சாரா நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) மற்றும் தனிநபர்களும் தங்கள் உதவிகளை வழங்க முன்வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.