கோழிக்கோடு: கேரளாவில், நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் நபருக்கு, எங்கிருந்து தொற்று பரவியது என்பதற்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கையில், அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது.கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த நபர்,
ஆக., 30ல், காய்ச்சலால் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், நிபா வைரசால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதை
அடுத்து, அவருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே, கடந்த 11ல், நிபா வைரசால் மேலும் ஒருவர்
உயிரிழந்தார். கேரளாவில் இதுவரை ஆறு பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மாநிலம் முழுதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.இந்நிலையில், கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று கூறியதாவது:நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் நபருக்கு, எங்கு, எப்படி தொற்று பரவியது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதன்படி, அவர் சென்று வந்த இடங்கள் குறித்து கண்டறிய,
அவரது மொபைல் போன் ‘டவர்’ இருப்பிடங்களை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், வவ்வால்களின் மாதிரிகளையும் சேகரித்து வருகிறோம்.
நிபா வைரசை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, மத்தியக் குழு பாராட்டு தெரிவித்து உள்ளது.
இதுவரை ஆறு பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது; புதிதாக வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை.
நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உயிரிழப்பு அபாயம்
நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக உள்ளதாக, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, ஐ.சி.எம்.ஆர்., தலைவர் ராஜீவ் பாஹ்ல் கூறியுள்ளதாவது:நிபா வைரஸ் பாதிக்கப்பட்டோரில் உயிரிழப்பு, 40 – 70 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் கொரோனாவில், இது 2 – 3 சதவீதமாக இருந்தது. அதனால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அடிக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து, இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட
திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை
சபரிமலை அய்யப்பன் கோவில், ஒவ்வொரு மலையாள மாதத்திலும் ஐந்து நாட்கள் பக்தர்கள் வழிபாட்டுக்காக நடை திறக்கப்படும். இந்த மாதம் இன்று நடை திறக்கப்படுகிறது.
நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதில் இருந்து பாதுகாக்கும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும்படி, கேரள அரசுக்கு அந்த மாநில உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதிப்பது தொடர்பாக திருவாங்கூர் தேவசம் போர்டு, மாநில சுகாதாரத்துறை செயலரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement