பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சென்ற ஆண்டு பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸோடு சேர்ந்து மகாபந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். அதன் பிறகு, 2024 தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் வேளையில் இறங்கிய நிதிஷ் குமார், பா.ஜ.க-வை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வந்தார்.

அப்போதே, நிதிஷ் குமாருக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது, அதற்காகத்தான் எதிர்க்கட்சிகளைச் சந்திக்கிறார் என்று பா.ஜ.க கிளப்பிவிட்டது. ஆனால், பா.ஜ.க-வின் கூற்றை தொடர்ந்து மறுத்துவந்த நிதிஷ் குமார், கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க என 16 எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து பாட்னாவில் தனது தலைமையில் கூட்டத்தை நடத்தினார். இப்போது அது 28 எதிர்க்கட்சிகளாக ஒன்றிணைந்து `இந்தியா’ கூட்டணியாக உருவெடுத்திருக்கிறது.
இந்த நிலையில், “தான் பிரதமராக வேண்டும் என்று உருவாக்கிய கூட்டணியே நிதிஷ் குமாரை வீழ்த்திவிடும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
பீகாரின் மதுபானி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் இந்தியா கூட்டணி மற்றும் நிதிஷ் குமாரை குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, “அவர்கள் புதிய பெயரில் புதிய கூட்டணி வைத்திருக்கின்றனர். அவர்கள் முன்பு UPA என்ற பெயரில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தார்கள். அதில், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் ஊழல் செய்தார்.

இதன் காரணமாக, மீண்டும் UPA என்ற பெயரைக் கொண்டுவர முடியாததால், அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டு, இந்தியா என்ற பெயரில் வந்திருக்கிறார்கள். மேலும், நிதிஷ் குமாரின் ஜேடியு, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கூட்டணி என்பது எண்ணெய் மற்றும் தண்ணீர் போன்றது. அவர்கள் ஒருபோதும் கலக்கமாட்டார்கள். எனவே நிதிஷ் குமாரிடம் ஒன்றைச் சொல்கிறேன், தண்ணீரும் எண்ணெய்யும் ஒருபோதும் ஒன்றல்ல. எண்ணெய்யிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. மாறாக அது தண்ணீருக்குத்தான் தீங்கு விளைவிக்கும். இறுதியில், நீங்கள் பிரதமராக வேண்டும் என்று உருவாக்கிய கூட்டணியே உங்களை வீழ்த்திவிடும்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY