பிரதமர் மோடிக்கு இன்று(செப்.,17) பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து| PM Modi Turns 73, Wishes Pour In From President, Ministers

புதுடில்லி: தனது 73வது பிறந்த நாளை இன்று(செப்., 17) கொண்டாடும் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அற்புதமான தலைமைத்துவம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்தி செய்தி: பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தொலைநோக்குப் பார்வையுடனும், வலுவான தலைமையுடனும், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், உங்கள் அற்புதமான தலைமைத்துவத்தால் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பயன் கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

பிரபலமான பிரதமர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் செழிப்பையும் நம்பிக்கையையும் கொண்டு வந்த நாட்டின் பிரபலமான பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் இறைவனை பிரார்த்திக்கிறேன். பிரதமரின் கடின உழைப்பால், கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதாக இருந்தாலும் சரி அல்லது சந்திரயான் -3 இன் வெற்றியாக இருந்தாலும் சரி, இன்று நமது மூவர்ணக்கொடி உலகம் முழுவதும் பெருமையுடன் பறக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியிருப்பதாவது: உலகின் மிகப் பிரபலமான மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய கவுரவம், மக்களின் பல பரிமாண வளர்ச்சி மற்றும் தேசத்தின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு நீங்கள் முக்கிய பங்கு ஆற்றியுள்ளீர்கள். பாஜ.,வின் அனைத்துத் தொண்டர்களும் உங்களின் தலைமைத்துவத்தை எப்போதும் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் வெற்றி பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும். இவ்வாறு நட்டா தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பாளி

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் வெற்றிகரமான மற்றும் கடின உழைப்பாளி பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் இந்தியாவுக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மதிப்பையும் அதிகரித்துள்ளார்.

மக்கள் நலன் மற்றும் ஏழை நலனில் முழு ஈடுபாடு கொண்ட மோடி இந்தியாவை வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவரது தலைமையின் கீழ், இந்தியா தொடர்ந்து முன்னேறியது மற்றும் அவர் தாய் இந்தியாவுக்கு தொடர்ந்து சேவை செய்தார். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக நீதி காவலர்

மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பதாவது: மக்கள் நலன் விரும்பும் மாபெரும் தலைவர், சர்வதேசம் போற்றும் சமூக நீதி காவலர், புதிய இந்தியாவின் சிற்பி, பாரத அன்னையின் தவப்புதல்வன் “பார் போற்றும் உன்னத தலைவர்” பாரத பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக பணிவு மிகுந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் சம வாய்ப்பு நாட்டின் வளர்ச்சியையே தன் இதய துடிப்பாக கொண்டிருக்கும் உன்னதத் தலைவர். ஒரு நாட்டின் பிரதமர் தன் நாட்டுக்கு மட்டும் பிரதமராக இல்லாமல் உலக தலைவர்கள் போற்றும் அகிம்சை வழி தலைவராக பாரதத்தாய் கண்ட வலிமை மிக்க பிரதமர் 73வது பிறந்தநாளில் அவரை வாழ்த்துவோம் கொண்டாடுவோம். பாரதப்பிரதமர் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ்ந்து, பாரத தேசத்தை வழிநடத்திச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன். இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பார்லி.,விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து, அவர் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன். என்றார்.

ஒருவரியில் ராகுல் வாழ்த்து

!

காங்., எம்.பி ராகுல் சமூக வலைதளத்தில், ” பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

பாஜ., தலைவர் அண்ணாமலை, உள்பட பல்வேறு மாநில பாஜ., தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.