குவஹாத்தி :அசாம் என்.ஐ.டி.,யில், மாணவர் ஒருவர் தற்கொலை செய்ததை அடுத்து, வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் சில்சரில், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.
தடியடி
இங்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரான கோஜ் பூகர், நேற்று முன்தினம் கல்வி நிறுவன விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர்
மரணத்துக்கு கல்வி நிறுவனமே காரணம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவர்கள், பேராசிரியர் ஒருவரின் வீட்டை சூறையாடினர்.கல்வி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களையும், அவர்கள் அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து, மாணவர்களிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் பேச்சு நடத்தினர். அவர்கள் மீதே மாணவர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தினர். இதனால், என்.ஐ.டி., வளாகமே கலவர பூமியாக மாறியது. இதில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்களுக்கு சில்சர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கல்வி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட சில்சர் போலீஸ் கமிஷனர் ரோஹன் குமார் ஜா, சம்பவம் குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை நியமித்துள்ளார். ஆன்லைன் வகுப்புஇறந்த மாணவர், கொரோனா காலத்தில் நடந்த ஆன்லைன் தேர்வுகளில் பெரும்பாலான பாடங்களில் தோல்வி அடைந்த நிலையில், அதற்கடுத்து நடந்த ஆன்லைன் வகுப்புகளிலும் முறையாக பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
பின், முறையாக வகுப்பு நடந்தபோதும், அடுத்தடுத்த தேர்வுகளில் தோல்வி அடைந்ததை அடுத்து, சிறப்புத் தேர்வு நடத்தும்படி அவர் கோரியுள்ளார்.
இதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement