அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 'எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன்' – விவேக் ராமசாமி

இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதற்கான பலமுனை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெரும் தொழிலதிபர் விவேக் ராமசாமியும் உள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு குடியரசு கட்சியினரின் ஆதரவை பெற தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் விவேக் ராமசாமி பல்வேறு கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய திட்டங்களை அறிவித்து வருகிறார். இதன் மூலம் அவர் வேட்பாளர் போட்டிக்கான களத்தில் தனித்து தெரிவதோடு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த விவேக் ராமசாமி தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதோடு, பல அரசு நிறுவனங்களையும் மூடுவேன் என கூறி அதிரவைத்தார்.

எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன்

இந்த நிலையில் தான் அமெரிக்க ஜனாதிபதியானால் இந்தியர்கள் பெரிதும் பலன்பெறக்கூடிய எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் என தெரிவித்துள்ளார். மேலும் எச்-1 பி விசா திட்டத்தை ஒப்பந்த அடிமைத்தனத்தின் வடிவம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எச்-1 பி விசா அமைப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோசமானது. குலுக்கல் முறையில் எச்-1 பி விசா வழங்கும் திட்டத்தை அகற்றிவிட்டு, உண்மையான தகுதி சேர்க்கை மூலம் விசா வழங்கப்பட வேண்டும். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் நிச்சயம் அதை செய்வேன். எச்-1 பி விசாவானது, அந்த விசா மூலம் அமெரிக்காவில் குடியேறியவருக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனத்தின் நன்மைக்காக மட்டுமே பெறப்படும் ஒப்பந்த அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாகும். குடும்ப உறுப்பினர்களாக வருபவர்கள் இந்த நாட்டிற்கு திறன் சார்ந்த பங்களிப்புகளை செய்யும் தகுதி வாய்ந்த புலம்பெயர்ந்தவர்கள் அல்ல.

எல்லையை பாதுகாக்க ராணுவ பலத்தை பயன்படுத்துவதோடு, சட்டவிரோத குடியேறிகளுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளை நாடு கடத்துவேன்” என தெரிவித்துள்ளார்.

எச்-1 பி விசா என்றால் என்ன?

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை உலக அளவில் இந்தியர்கள் மற்றும் சீனர்களே அதிக அளவில் பெறுகின்றனர். அதிலும் குறிப்பாக ஐ.டி. என்று அழைக்கப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களிடம் இந்த விசாவுக்கு பெரும் மவுசு உள்ளது.

அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 65 ஆயிரம் எச்-1 பி விசாக்களை வழங்குகிறது. அவற்றில் 20,000 விசாக்கள், அமெரிக்க நிறுவனங்களில் உயர்கல்வி பயின்ற மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய 45 ஆயிரம் விசாக்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பதால் குலுக்கல் முறையில் விண்ணபதரார்கள் தேர்வு செய்யப்பட்டு விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த முறையை ஒழித்துவிட்டுதான் தகுதி அடிப்படையில் விசா வழங்குவேன் என விவேக் ராமசாமி கூறுகிறார்.

29 முறை பயனடைந்த விவேக் ராமசாமி

தற்போது எச்-1 பி விசா திட்டத்தை எதிர்க்கும் விவேக் ராமசாமி 29 முறை அந்த திட்டத்தை பயன்படுத்தியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் ரோவண்ட் சயின்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்யும் வரையில் அந்த நிறுவனம் எச்-1 பி விசா திட்டத்தின் கீழ் 29 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.