திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் உலா

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 18-ந் தேதி கொடி ஏற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. முதல்நாள் அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார். அதனை தொடர்ந்து சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்தனர்.

சாமி வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக்குழுவினர் தங்களது மாநிலத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். தற்போது இரவில் கோவில் வெளிப்புறங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

இந்நிலையில் இன்று காலை சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்தனர். பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோஷம் எழுப்பினர்.

சாமி வீதியுலா வந்த போது சிறுவர், சிறுமிகள், இளம்பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் புலிவேடமிட்டு சிறுவன் ஒருவன் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன பக்தர்கள் மற்றும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.