வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெஹ்ரான்: பொது இடங்களில், ‘ஹிஜாப்’ அணிய மறுக்கும் பெண்களுக்கும், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு, ஈரான் பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும், 7 வயதை கடந்த சிறுமியர், தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான துணியான, ஹிஜாப்பை கட்டாயம் அணிய வேண்டும் என்பது சட்டம். இதை எதிர்த்து போராட்டம் நடத்திய மஹ்சா அமினி என்ற இளம்பெண், அந்நாட்டு அறநெறி போலீசார் தாக்கியதில் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, நாடு முழுதும் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம் வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த முடியாததால், ஆடை கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் அறநெறி போலீஸ் அமைப்பு கலைக்கப்பட்டது. ஆனாலும், ஹிஜாப் அணியாமல் செல்லும் பெண்களை கண்காணிக்கும் வகையில், நாடு முழுதும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
![]() |
இந்நிலையில், பொது இடங்களில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கும், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு அந்நாட்டு பார்லி., நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தமுள்ள, 290 உறுப்பினர்களில், 152 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதை சட்டமாக மாற்றுவதற்கு அந்நாட்டு கார்டியன் கவுன்சில் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பொது இடங்களில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு அதிகபட்சமாக, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மஹ்சா அமினி இறந்து ஓராண்டு ஆன நிலையில், ஈரான் அரசு முன்னெடுத்துள்ள இந்த மசோதாவுக்கு, அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement