இங்கிலாந்து: காதலியை கழிவறையில் பூட்டி விட்டு… காதலருக்கு நேர்ந்த கொடூரம்

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் காதலியுடன் உணவு விடுதிக்கு சென்று விட்டு திரும்பியபோது, காதலனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதியை சேர்ந்தவரான மெஹ்மத் கோரே ஆல்பர்ஜின் (வயது 43), லண்டன் நகரில் பிஜிம் எப்.எம். என்ற வானொலி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

பிரிட்டிஷ் துருக்கி சமூகத்தினரிடையே, பிரபல டி.ஜே.வாக அறியப்படுபவர். லண்டன் நகரில் தொட்டன்ஹேம் ஹாட்ஸ்பர் ஸ்டேடியம் அருகே கடந்த ஆண்டு அக்டோபரில் ஆல்பர்ஜின் 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தி, சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று, தனது காதலியான கோஜ்டே டால்புடாக் (வயது 34) என்பவருடன் அவர் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் மேபேர் என்ற பகுதியில் உள்ள இத்தாலிய உணவு விடுதிக்கு சென்று விட்டு திரும்பியுள்ளனர். அப்போது, ஆல்பர்ஜின் காரில், பின்தொடர்ந்து கண்டறியும் கருவி ஒன்றை, அந்த கும்பல் இணைத்து கண்காணித்து உள்ளது என கூறப்படுகிறது.

அந்த கும்பல், அவர்கள் இருவரையும் வாகனங்களில் தனித்தனியாக அமர வைத்து, ஆளில்லாத மதுபான பார் ஒன்றுக்கு கடத்தி சென்றுள்ளனர். இதன்பின் கொடூர சம்பவங்கள் நடந்தேறின.

ஆல்பர்ஜின்னின் காதலி கோஜ்டேவை கழிவறை ஒன்றில் வைத்து பூட்டி விட்டனர். ஆல்பர்ஜின்னை அடித்து, உதைத்து, மிதித்து உள்ளனர். சுடுதண்ணீரை மேலே ஊற்றி, கத்தியால் குத்தி, பேட்டால் அடித்து, மூச்சு விட முடியாமல் செய்து, சித்ரவதை செய்துள்ளனர். இதுபற்றி அவருடைய வழக்கறிஞர் கிறிஸ்பின் ஆய்லெட் கூறும்போது, ஆல்பர்ஜின் மரணம் அடைவதற்கு முன்பு அவரை நிர்வாணப்படுத்தி, கொடுமையாக சித்ரவதை செய்தனர்.

இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதையில் நடந்த தாக்குதல் என கூறியுள்ளார். பிரேத பரிசோதனையில் அவருடைய உடலில் 94 இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன. அவருடைய அந்தரங்க உறுப்புகள் மற்றும் உடலின் உள்ளேயும் காயங்கள் காணப்படுகின்றன.

இந்த வழக்கில் கொலை, கடத்தல், சிறை பிடித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 6 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. அவர்கள், ஸ்டெப்பான் கோர்டன் (வயது 34), தேஜீன் கென்னடி (வயது 33), சாமுவேல் ஓவுசு-ஒபோகு (வயது 35), ஜூனியர் கெட்டில் (வயது 32), அலி கவாக் (வயது 26), எர்டோகன் உல்கே (வயது 56) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பின்னரே அவருடைய காதலி கழிவறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர்கள் 6 பேருக்கு எதிராகவும் லண்டனில் உள்ள மத்திய குற்ற நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.