தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளிலும் நடிகர் விஜய் சேதுபதி பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் 2021-ம் ஆண்டு தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படத்தில் நடித்திருந்தார். சிறந்த தெலுங்குப் படத்திற்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றது. கீர்த்தி ஷெட்டிக்குத் தந்தையாக, படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி அதில் நடித்திருந்தார். அதன் பிறகு கீர்த்தி ஷெட்டியுடன் நடிப்பதற்கான வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வந்திருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதி அதை மறுத்திருக்கிறார்.

இதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருக்கிறார். “தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ படத்தில் கீர்த்தி ஷெட்டிக்குத் தந்தையாக நடித்தேன். இந்தப் படம் தயாரிப்பிலிருந்த போதுதான் தமிழில் ‘லாபம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைக்கப் படக்குழு திட்டமிட்டது.
இதை அறிந்த நான் உடனடியாக படக்குழுவினரை அழைத்து, கீர்த்தி ஷெட்டிக்கு நான் அப்பாவாக நடித்துவிட்டேன். அவர் எனக்கு மகள் போன்றவர். அவருடன் என்னால் ரொமான்டிக்காக நடிக்க முடியாது. இது தர்மசங்கடமாக இருக்கும் என்று கூறி தவிர்த்துவிட்டேன்” என்றார்.

‘உப்பெனா’ ஷூட்டிங் அனுபவம் குறித்தும் பேசியவர், “க்ளைமாக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கீர்த்தியைவிட அவர் சில வருடங்களே இளையவர். அதனால்தான் அவரை என் மகளாக நினைத்தேன். அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது” என்றார்.