திருவனந்தபுரம், கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம், ‘யெல்லோ அலர்ட்’ எனப்படும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய ஏழு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பெப்பாரா அணையின் நீர் மட்டம் ஒரே நாளில், 10 செ.மீ., உயர்ந்துள்ளது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.
இதையொட்டி, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தொடர் கனமழையால் கோட்டயம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், மரங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடக்கு மாவட்டங்களான கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதற்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையின் படி 6 – 11 செ.மீ., வரை மழை அளவு பெய்யக் கூடும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement