தினமலர் நாளிதழின் சென்னைப் பதிப்பு நிகழ்த்திய முதல் முயற்சியே புரட்சிகரமாக அமைந்தது. சென்னையில் இருந்து வெளியான அனைத்துத் தமிழ் நாளிதழ்களும் ரோட்டரி மிஷினிலேயே அச்சடித்து வெளியாகின. எனவே அந்தப் பத்திரிகைகளில் படங்களும், எழுத்துக்களும் மங்கலாகவே இருந்தது.
“இந்தக் குறையை தினமலர் சென்னைப் பதிப்பில் நீக்கிவிட வேண்டும். வாசகர்களுக்குத் தெளிவான அச்சுடன் கூடிய பத்திரிக்கையை வழங்க வேண்டும்” என்று தினமலர் நிர்வாகத்தினர் தீர்மானித்தனர்.
‘பந்து’ அச்சு இயந்திரத்தை வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. விஷ்வ பந்து குப்தா என்ற காங்கிரஸ் எம்பி புதுடில்லி அருகே அச்சு இயந்திரங்களை வடிவமைத்து வழங்கும் தொழிற்சாலையை வைத்திருந்தார். அங்கிருந்துதான் பந்து ஆப்செட் அச்சு எந்திரம் வாங்கப்பட்டது. அச்சு இயந்திரம் கொண்டுவரும் பணியை சென்னை சர்ச் பார்க் கான்வென்ட் எதிரே அண்ணா சாலையில் இருந்த மஹா பீர் கம்பெனி கவனித்துக் கொண்டது.
இச்சூழலில் தான் 1979 ஆம் ஆண்டு தினமலர் சென்னை பதிப்பைச் சென்னையில் கொண்டுவர தினமலர் நிர்வாகத்தினர் திட்டமிட்டனர்.
அப்போது சென்னை வந்திருந்த தினமலர் நிர்வாகி, என்னை அழைத்தார். தினமலர் சென்னை பதிப்பு சார்ந்த அனைத்து பூர்வாங்கப் பணிகளையும் நடத்தி முடிக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தார். துடிதுடிப்பாக இயங்கிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து அவர், “சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
என்னை அழைத்துச் சென்று, அண்ணா சாலை ஸ்பென்சஸ் பிளாசாவுக்கு எதிர் உள்ள விசாலம் சிட் பண்ட்ஸ் கட்டடப் பகுதியைக் காட்டினார். அங்கு தினமலருக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கினோம். அந்தக் கட்டடங்களின் சிமெண்ட் கலவையில் அடியேனின் வியர்வையும் கலந்து இருக்கிறது என்று கூறும் அளவுக்கு சித்தாள் வேலையையும் பார்த்து இருக்கிறேன்.
அனைத்து பணிகளையும் முடித்து வைத்த நிலையில், டாக்டர் வெங்கிடபதி அவர்கள் சென்னைக்கு வந்தார். அவருக்கான ஒரே ஒரு அறை மட்டும் தயார் நிலையில் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அதில் அவர் அமர்ந்தவாறு தினமலருக்கான லைனோ டைப் மற்றும் பந்து ஆப்செட் இயந்திரங்களை நிலை நிறுத்துகின்ற பணியில் நேரடியாக ஈடுபட்டார். அப்போது ஒரு லைனோடைப் இயந்திரம் திடீரென்று குடை சாய்ந்து போக, டாக்டர், மயிரிழையில் உயிர் தப்பினார். அவருடன் இருந்த மற்ற ஊழியர்களும் தெய்வாதீனமாகத் தப்பிப் பிழைத்தனர். அப்போது பணியில் இருந்த அனைவரையும் அழைத்து டாக்டர், பார்ட்டி கொடுத்து கொண்டாடினார்.
இயந்திரங்களை நிலை நிறுத்தும் பணியை நடத்திக் கொடுப்பதற்காக, இயந்திரங்களைத் தயாரித்த தொழிற்சாலையில் இருந்து இரண்டு நிபுணர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆகவே அவர்கள் இந்தியில் கூறிய தகவல்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டிய பணி என்னிடமே வழங்கப்பட்டிருந்தது.
பத்திரிகை அச்சுப் பணிகள் தொடங்கலாம் என்று கருதப்பட்ட வேளையில் சென்னைக்கு வந்த, அப்போதைய தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னேற்பாடுகளை முடுக்கி விட, தினமலர் பதிப்பு இனிதே தொடங்கியது. இதன் தொடக்க விழா ராஜாஜி அரங்கில் நடந்தது. இதில் எம்ஜிஆர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் மதுரைக்குப் போய்விட்டார்.
தமிழ்ப் பத்திரிகை உலகில் வெப் ஆப்செட் எனும் அச்சு எந்திரத்தை அறிமுகப்படுத்தியது தினமலர் தான். இதில் அச்சாகி வெளிவரும் படங்களைப் பார்த்து, வாசகர்கள் வியந்து போயினர். சினிமா படங்களின் போட்டோக்கள் அச்சு அசலாக அச்சானதைக் கண்டு, திரைத்துறையினர் கொண்டாடினர். அந்துமணியின் ஆரம்ப காலப் பொறுப்பு என்ற வகையில் அவர் படங்களைத் தெரிவு செய்து அச்சுக்குக் கொடுத்தார்.
ஒருமுறை அவர் உசிலை மணியின் போட்டோவை தேர்வு செய்து கொடுக்க, அது முழுப்பக்கம் அச்சாகி வெளிவந்தது. ஒரு விழாவில் சந்தித்துத் தற்செயலாகப் பேசிக் கொண்டிருந்தபோது உசிலைமணி இப்படிச் சொன்னார்: “தினமலரில் வெளியான என் முழுப்பக்கப் படத்தை விரித்து வைத்துப் பார்த்துப் பார்த்து நான் ஆனந்தக்கண்ணீர் வடித்தேன்” என்று உருகிப் பேசினார் உசிலைமணி.
தினமலர் நாளிதழில் வெப் ஆப்செட் அச்சுப் பத்திரிகை ஆரம்பித்து வைத்த இந்த புதிய பாணிப் படி, வேறு வழி இல்லாமல் அனைத்து பத்திரிகைகளுமே படிப்படியாக மாறவேண்டிய கட்டாயக் காட்சிகளைத் தமிழகம் சந்தித்தது. அந்தவகையில் தமிழ்ப் பத்திரிகை உலகில் வெப் ஆப்செட் அறிமுகப்படுத்திய முன்னோடி என்று தினமலர் நாளிதழைக் குறிப்பிட்டுக் குதூகலிக்க முடியும்.
ஆர் நூருல்லா
செய்தியாளன்
9655578786
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்