திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சிரஞ்சீவி : ராம்சரண் நெகிழ்ச்சி பதிவு

தென்னிந்தியத் திரையுலகத்தில் தமிழ் சினிமாவை விட பல வெற்றிகளையும், அதிகமான வசூலையும் கொடுக்கும் திரையுலகம் தெலுங்குத் திரையுலகம். தெலுங்கில் பல வசூல் சாதனைகளைப் புரிந்த நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. 'மெகா ஸ்டார்' என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சிரஞ்சீவி சினிமாவுக்கு வந்து நேற்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அவர் முதலில் அறிமுகமான 'பிரணம் காரீடு' படம் 1978ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வெளிவந்தது. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து 80களிலேயே முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார். தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் 1981ல் வெளிவந்த '47 நாட்கள்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அடுத்து ரஜினிகாந்த் நடித்து 1981ல் வெளிவந்த 'ராணுவ வீரன்' படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பின் 1989ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'மாப்பிள்ளை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். ஹிந்தியிலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் சிரஞ்சீவி.

சினிமாவில் 45 வருடங்களை நிறைவு செய்த சிரஞ்சீவிக்கு அவரது மகன் ராம்சரண், “சினிமாவில் அற்புதமான 45 ஆண்டு மெகா பயணத்தை நிறைவு செய்த எங்கள் அன்புக்குரிய மெகா ஸ்டாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நம்ப முடியாத ஒரு பயணம். 'பிரணம் காரீடு' படத்தில் ஆரம்பித்து, இன்றும் திகைப்பான நடிப்பால் தொடர்ந்து பயணித்து வருகிறீர்கள். திரையிலும், திரைக்குப் பின்னால் உங்களது மனிதாபிமான செயல்களால் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிப்பவராக இருக்கிறீர்கள். ஒழுக்கம், கடின உழைப்பு, ஈடுபாடு, திறமை என அனைத்து மதிப்புகளையும் விதைத்ததற்கு நன்றி அப்பா,” எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.