பெண்கள் தலைமையில் நாடு வளர்ச்சி காண மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வழிவகுக்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: பெண்கள் தலைமையில் நாடு வளர்ச்சி காண மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கியது. இந்திய பார் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், ‘நீதி வழங்கல் அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்’ என்ற தலைப்பில் இன்றும் நாளையும் உரையாடல்கள் நடைபெற உள்ளன. தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளன. யோசனைகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவிப்பதையும், சட்டப் பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். புகழ்பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய சட்டத்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, “வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் தருணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. சமீபத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் தலைமையில் நாடு வளர்ச்சி காண்பதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கும்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. நாட்டின் சுதந்திர போராட்டத்தில் வழக்கறிஞர்களின் பங்களிப்பு மகத்தானது. பலர் தங்களது வழக்கறிஞர் பணிகளை கைவிட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா மீது உலகம் இன்று நம்பிக்கை கொண்டிருப்பதற்கு சுதந்திரமான நீதித்துறை மிக முக்கிய காரணம்.

ஒரு மாதத்துக்கு முன் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெயரை பாரதம் பெற்றது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு எனும் இலக்கை நோக்கி நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இதற்கு பாரபட்சமற்ற, வலிமையான, சுதந்திரமான நீதித்துறை தேவை. இந்த மாநாட்டின் மூலம் நாம் அனைவரும் ஒவரிடம் இருந்து மற்றொருவர் கற்க முடியும் என நான் நம்புகிறேன். இணைய பயங்கரவாதமாக இருந்தாலும், பண மோசடியாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நடக்கும் மோசடியாக இருந்தாலும் இவை அனைத்துக்கம் சர்வதேச அளவிலான சட்டம் அவசியம். இதை ஒரு அரசு மட்டும் செய்ய முடியாது. பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து இந்த சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், தொழில்கள் எளிதாக தொடங்கப்படுவதையும் இயங்குவதையும் உறுதி செய்யக் கூடிய சட்ட அமைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் உள்பட ஏராளமான சட்ட வல்லுநர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாடு, நீதி வழங்குவதில் சவால்கள் அற்ற எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து ஆராயும்” எனக் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.