டெல்லியில் உள்ள பூசா வளாகத்தில் கடந்த செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து கிராமப்புற பிராந்திய வங்கிகளையும் முழு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கும் கடன்களை விரிவாக்கம் செய்யவும் அழைப்பு விடுத்தார். மேலும் விவசாயிகளுக்கு நிதி சேவைகள் வழங்குவதை வலுப்படுத்த மூன்று புதிய முயற்சிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

முதல் நிகழ்வாக கிசான் ரின் போர்ட்டலை (Kisan Rin Portal) தொடங்கி வைத்து, PM kisan பயனாளிகள் உள்பட கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் பலனை அனைத்து விவசாயிகளும் பெறுவதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் KCC (Kisan Credit Card) பிரசாரத்தை (Door-to-door KCC campaign) அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் ஒருங்கிணைந்த விவசாயத்திற்கான வானிலை போர்ட்டலையும் சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
“இந்த கிசான் ரின் போர்ட்டல், பல அரசுத் துறைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமாகும். இது விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதிச் சேவைகள், கடன் வழங்குதல், வட்டி மானியக் கோரிக்கைகள் மற்றும் பயன்பாடு பற்றிய விரிவான தரவுகளை வழங்கும். அதேபோல் நிர்மலா சீதாராமனால் தொடங்கி வைக்கப்பட்ட WINDS எனப்படும் வானிலை தகவல் நெட்வொர்க் தரவு அமைப்பானது விவசாய வானிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கும் ஆன்லைன் தளமாக செயல்படும்” எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், “கோவிட் ஊரடங்கு காலத்தில், விவசாயிகளை சார்ந்தே நாம் இருந்தோம். விவசாயிகள் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம், நாட்டின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருப்பதையும், விவசாய வளர்ச்சி பொருளாதாரத்திற்கு உதவுவதையும் அவர்கள் உறுதி செய்தனர்” என்று கூறிய அவர், கிசான் ரின் போர்ட்டலுக்கு தரவு மற்றும் தகவல்களை வழங்குவதில் நாட்டின் அனைத்து வங்கிகளின் முழு ஒத்துழைப்பை உறுதி செய்யுமாறு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி சேவைகள் துறையின் செயலாளர் விவேக் ஜோஷியிடம் கேட்டுக் கொண்டார்.