லியோனல் மெஸ்ஸி, உலகெங்கிலும் தன் சாதனைகள் மூலம் தலைப்புச் செய்திகளை உருவாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் இம்முறை, ஆட்டநாயகன் மெஸ்ஸியைவிட FIFA உலகக் கோப்பை வெற்றியாளரை மைதானத்தில் ஊடுருவும் நபர்களிடமிருந்து பாதுகாக்க முயலும் அவரது பாடிகார்டுதான் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். இன்டர் மியாமி அணியின் சக வீரர்கள் கோல் அடித்ததை கொண்டாடியபோதும், அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸிக்கு எந்தவித இடையூறும், ஆபத்தும் வராதவாறு அவரது மெய்க்காப்பாளர் உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருப்பார்.
சமீபகாலமாக நீங்கள் மெஸ்ஸியின் ஆட்டத்தை கவனிப்பவராக இருந்தால், அவருடைய மெய்க்காப்பாளரை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். காரணம், அவர் மெஸ்ஸியின் புதிய நிழல். காவலன் படத்தில் விஜய், அசினுக்கு பாடிகார்டாக பணியாற்றுவது போல், மெஸ்ஸிக்கு அவரின் பாதுகாவலர் யாசின் சியூகோ.

களத்தில் மெஸ்ஸி கோல் அடிப்பதில் கவனம் கொள்வார். ஆனால், அவரின் பாதுகாவலரின் கவனம் எல்லாம் மெஸ்ஸி மீது மட்டும்தான். மெஸ்ஸியே கோல் அடித்தாலும் கொண்டாடமாட்டார், சக வீரர்களன்றி வேறு யாரும் நெருங்க முடியாத வண்ணம் வந்து நிற்பார் அரணாக. வீரர்கள் பயணிக்கும் பேருந்தில் வீரர்கள் அல்லாத ஒருவரும் பயணிப்பார் என்றால், அது அவரின் பாதுகாவலர்தான்.
லியோனல் மெஸ்ஸியின் மெய்க்காப்பாளரான யாசின் சியூகோ, அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் வீரர் ஆவர். அவர் இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளார். மேலும் பல தற்காப்பு கலைகளை கற்று கைதேர்ந்தவர். பல உள்ளூர் ஊடகங்கள், அவரை முன்னாள் இங்கிலாந்து கேப்டனும் இன்டர் மியாமியின் இணை உரிமையாளருமான டேவிட் பெக்காம் தான் மெஸ்ஸியின் பாடிகாடாக பரிந்துரை செய்துள்ளார் என குறிப்பிடுகின்றன.
இருப்பினும், மெஸ்ஸியை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு அவருக்கு மட்டுமல்ல. யாசின் சியூகோ தலைமையில் 50 உறுப்பினர்கள் கொண்ட குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது, இந்தக் குழு மெஸ்ஸி 24 மணி நேரமும் பாதுகாப்பாக வலம் வருவதை உறுதி செய்கிறது. தங்கள் அணியின் ஸ்டார் ப்ளேயரான மெஸ்ஸி, பாதுகாப்பாக விளையாடுவதை உறுதிசெய்ய அணி நிர்வாகம் இதனை செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
களத்தில் ஆக்டிவாகச் செயல்படும் யாசின் சியூகோ, சமூக ஊடகங்களிலும் வைரல். தற்காப்புக் கலை குறித்து பல வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு ஒரு லட்சத்து இருபத்தொன்பதாயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர், இதில் மெஸ்ஸி மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மன்(PSG) அணியில் உள்ள பிரபல வீரர் செர்ஜியோ ராமோஸ் உட்பட பலரும் அடக்கம்.
களத்துக்குள் மெஸ்ஸி ஓடிக்கொண்டு இருக்க, அவருக்கு இணையாக களத்துக்கு வெளியே, அதாவது கோட்டுக்கு வெளியே ஓடிக்கொண்டே இருக்கிறார் யாசின் சியூகோ.
அர்ஜென்டினாவின் ஜாம்பவான் தனது புதிய க்ளப் அணியான இன்டர் மியாமியில் தொடர்ந்து பிரகாசித்து வரும் நிலையில், யாசின் அவரின் நிழலாக பாதுகாக்கும் காட்சிகள் எல்லாம் வைரல்.!