காலிஸ்தானியர் படுகொலை விவகாரம்; குற்றச்சாட்டுகள் உண்மையானால்… கனடா மந்திரி பேட்டி

டொரண்டோ,

கனடாவில் காலிஸ்தானியரான நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில், இந்தியா மீது கனடா பிரதமர் கூறிய குற்றச்சாட்டு, தொடர்ந்து இரு நாட்டு தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரத்தில் கனடா பாதுகாப்பு துறை மந்திரி பில் பிளேர் கூறும்போது, இந்தியாவுடனான நல்லுறவு மிக முக்கியம். அந்த வகையில், இது ஒரு சவாலான விசயம்.

ஆனால் அதே வேளையில், நாங்கள் முழு அளவிலான ஒரு விசாரணையை நடத்தி இருக்கிறோம் மற்றும் உண்மையை கண்டறிந்து உள்ளோம் என உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மையென்று நிரூபிக்கப்பட்டடால், எங்களுடைய இறையாண்மையை மீறிய விசயத்தில் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய விசயமும் இதுவாகும் என்று கூறியுள்ளார்.

கனடாவில் வசித்து வந்த சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில், அவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் எதிரொலித்து, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக, பல்வேறு முறை கனடாவை தொடர்பு கொண்டு அதுபற்றிய விவரங்களை பகிர்ந்து வந்துள்ளது.

2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, இந்தியா அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் பெற்றிருந்தது. இதன்பின் 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் பயங்கரவாத பரவலுடன் தொடர்புடைய வழக்குகளில் அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி பஞ்சாப் போலீசார் கேட்டு கொண்டனர்.

இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளுக்கு பின்னர், 2020-ம் ஆண்டு அவரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது. இந்த சூழலில் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவின் மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றச்சாட்டு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் ட்ரூடோ அடுத்து ஒரு புதிய குற்றச்சாட்டை கூறினார். அவர் கூறும்போது, இந்தியாவை பற்றி கடந்த திங்கட் கிழமை நான் பேசிய விசயங்களை பற்றி நம்பத்தக்க குற்றச்சாட்டுகளை அந்நாட்டிடம் இந்தியா பகிர்ந்து உள்ளது. சில வாரங்களுக்கு முன்பே அதனை நாங்கள் செய்து விட்டோம் என கூறினார். இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ பணியை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்.

அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், இந்த தீவிர விவகாரத்தின் அடித்தளம் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது கடந்த இரு தினங்களுக்கு முன் கூறினார்.

நிஜ்ஜார் படுகொலையை இந்தியாவுடன் முதலில் தொடர்புப்படுத்தி ட்ரூடோ பேசினார். இதனை இந்தியா மறுத்தது. இந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குறிப்பிட்ட தகவல் எதனையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தது.

இந்திய தூதரை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக கனடா தூதரை வெளியேறும்படி கடந்த செவ்வாய் கிழமை இந்தியா உத்தரவிட்டது. கடந்த வியாழ கிழமை, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறும்போது, இந்த விவகாரம் அரசியல்ரீதியாக தூண்டப்பட்டுள்ளது என கூறினார்.

இதேபோன்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது அவரிடம், கனடா பிரதமர் ட்ரூடோ கூறினார் என்றும் அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன என்றும் மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பொன்று தெரிவித்தது.

இந்த நிலையில், கனடாவில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு, விசா சேவையையும் இந்தியா சஸ்பெண்டு செய்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.