புதுடெல்லி: முன் எப்போதும் இல்லாத அளவாக கடந்த 3 மாதங்களில் 90 ஆயிரம் மாணவர்களுக்கு விசா அளித்துள்ளதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் இந்திய மாணவர்கள் 90 ஆயிரம் பேருக்கு நாங்கள் விசா அளித்துள்ளோம். இந்திய – அமெரிக்க கல்வி பரிமாற்றத்தில் இது முன் எப்போதும் இல்லாத ஓர் உயர்வு. அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 4ல் ஒருவர் இந்திய மாணவர். கல்வி சார்ந்த தங்கள் இலக்குகளை அடைய அமெரிக்காவை தேர்வு செய்த மாணவர்களுக்கு நாங்கள் எங்கள் மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். குழுவாக இயங்கியதன் மூலமும் புதுமைகளை புகுத்தியதன் மூலமும் தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் கல்வியை அமெரிக்காவில் உரிய நேரத்தில் கற்கத் தொடங்குவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்திருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கும் பணி தொடங்கியபோது பேசிய இந்திய தூதரக விவகாரங்களுக்கான அமெரிக்க அமைச்சர் பிரெண்டன் முல்லர்கி, “கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கப்பட்டது. இது இதற்கு முன் இல்லாத மிகப் பெரிய எண்ணிக்கை. வேறு எந்த வெளிநாட்டு மாணவர்களுக்கும் இந்த அளவு அமெரிக்க விசா வழங்கப்பட்டதில்லை” என்று தெரிவித்திருந்தார்.
90 ஆயிரம் மாணவர்களுக்கு விசா வழங்கி இருப்பதன் மூலம் தற்போது இரண்டு லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகிறார்கள். இது அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்களில் 20 சதவீதமாகும்.
இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் நோக்கில், அமெரிக்காவில் கல்வி என்ற பெயரில் அமெரிக்க அரசு அதிக அளவில் விளம்பரங்களை செய்திருந்தது. அதோடு, அமெரிக்காவில் கல்வி கற்பது தொடர்பாக தேவையான விளக்கங்களை இந்திய மாணவர்கள் பெறுவதற்கான நிகழ்ச்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. இதற்காக இந்தியாவில் 8 மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதோடு, educationusa.state.gov என்ற இணையதளம் மூலமும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமும் மாணவர்களை ஈர்ப்பதற்கான விளம்பரங்களை மேற்கொள்வது, தகவல்களை அளிப்பது உள்ளிட்ட பணிகளை அமெரிக்கா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.