விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இனிப்புகள் வழங்கி நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே டாஸ்மாக் கடை இயங்கிவந்தது. இக்கடையால் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகள் விற்கப்பட்ட பொருட்களுக்கு கிடைக்கும் பணத்தை மதுவுக்கு செலவிட வாய்ப்புள்ளது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுகொண்ட மாவட்ட நிர்வாகம் சில ஆண்டுகளுக்கு முன்பு கடையை மூடியது.
இந்நிலையில், திங்கள்கிழமை இங்கு டாஸ்மாக் கடை மீண்டும் திறக்க முடிவெடுக்கப்பட்டதை அறிந்த வழக்கறிஞர் சக்திராஜன், பாஜக மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் ஏழுமலை ஆகியோர் அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தனர். ஆனால், ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் எதிரே மீண்டும் இன்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மாலை வழக்கறிஞர் சக்திராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள் பொது மக்களுக்கு இனிப்பு கொடுத்து நூதனப் போராட்டம் நடத்தினர். இதில் வழக்கறிஞர்கள் பாஸ்கரைய்யா, பாலகிருஷ்ணன், ஆனந்தராஜ், பாலாஜி, ராஜசேகரன், சுதன், சக்திவேல், முத்துகிருஷ்ணன், மணிகண்டன், பொது மக்கள் சார்பில் சிவாஜி, ஸ்ரீராமன், ராஜ்குமார், கண்ணாயிரம், வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.