புதுடெல்லி: சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “கொசு, டெங்கு காய்ச்சல் போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்றார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லி கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள துறவிகளும், தலைவர்களும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியின் துறவிகள் மகா மண்டலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி மற்றும் திமுக தலைவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மகனின் தவறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, டெல்லி சரோஜினி நகர் மார்கெட் பகுதியில் ஒன்றுகூடிய இவர்கள், சாணக்யபுரியிலுள்ள தமிழ்நாடு இல்லம் நோக்கி கிளம்பினர். இவர்களை ஆப்ரிக்கா அவென்யூ சாலையில் டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் உதயநிதி, ஆ.ராசா, சமாஜ்வாதி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா, கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
டெல்லி துறவிகள் மகா மண்டலத்தின் தலைவர் நாரயண் கிரி கூறும்போது, “உதயநிதி விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் அமைதி காப்பது வியப்பு அளிக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் சனாதனத்தை விமர்சித்து பேசிய வார்த்தைகளால் நாட்டின் பிரிவுகள் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா, உ.பி. மாநிலங்களை சேர்ந்த துறவிகளும் பங்கேற்றனர். டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவராக புதிதாக தேர்வான துஷார் தத்தாவும் அமைச்சர் உதயநிதியை கண்டித்துள்ளார்.
ஏபிவிபி அமைப்பை சேர்ந்த துஷார், “எந்தவித காரணமும் இன்றி உதயநிதி, சனாதனத்தை விமர்சித்தது கண்டிக்கத்தக்கது. இவர் தன் நாக்கை அடக்கி வைக்கப் பழக வேண்டும். அமைச்சர் எனும் பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு வெறுக்கத்தக்கப் பேச்சுகளை பேசக்கூடாது” என்றார்.