லெஸ்பியன்களாக நடித்தது ஏன்? – நடிகைகள் விளக்கம்

நடிகை நீலிமை இசையும் ஷார்ட் பிளிக்ஸ் என்ற ஓடிடி தளமும் இணைந்து தயாரித்துள்ள படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'. ஒரு இஸ்லாமிய பெண்ணும், ஒரு இந்து பெண்ணும் லெஸ்பியனாக இருப்பதும், அதனால் வரும் பிரச்னைகளும்தான் படத்தின் கதை. இதில் அந்த லெஸ்பியன்களாக ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சான நெய்தியார் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ருதி பெரியசாமி இதுகுறித்து கூறும்போது “ படத்தின் கதையை இயக்குநர் எனக்கு விவரித்த போதே எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே தருணத்தில் இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் பலர் ஓரின சேர்க்கையாளர்கள் எனும் பிரத்தியேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன்” என்றார்.

நிரஞ்சான நெய்தியார் கூறும்போது “சமூகத்தில் நடப்பதைத்தான் படமாக எடுத்துள்ளார்கள். ஒரு நடிகையாக இயக்குனர் சொன்னதை செய்தோம். அதற்காக அந்த படத்தின் கருத்தோடு, இயக்குனரின் கருத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் லெஸ்பியன் ஆதரவாளரா என்று கேட்கிறார்கள். படத்தில் ஒருவர் கொலைகாரனாக நடித்தால் அவரை கொலைக்கு ஆதரவாளராக கருத முடியுமா? இது ஒரு பிரச்னையை பேசி இருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை கூறும்போது ''இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் 'அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம் ' என்றார். இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.