ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `மார்க் ஆண்டனி’.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருந்தது. ரசிகர்களிடையேயும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினரும் ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் வெற்றி விழா கொண்டாடியிருந்தனர்.
இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெற ரூ.6.5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது என்று நடிகர் விஷால் மும்பை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) மீது குற்றம் சாட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள விஷால், “ஊழலைச் சகித்துக் கொள்ள முடியாது. அதுவும், அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழலைச் சகித்துக் கொள்ளவே முடியாது. கடந்த வாரம் வெளியான எனது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெறுவதற்கு மும்பையில் இருக்கும் திரைப்பட சான்றிதழ் அலுவலகத்திற்கு (CBFC) படத்தை அனுப்பினோம். ஆனால், ரூ.6.5 லட்சம் கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதன்படி, படத்தின் திரையிடலுக்கு ரூ.3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் என இரண்டு பரிவர்த்தனையாக மொத்தம் ரூ.6.5 லட்சம் பணத்தைப் பரிவர்த்தனைச் செய்தோம்.
கடைசி நேரத்தில் திரைப்படத்தை வெளியிட எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. எனவே, இடைத்தரகராக இருந்த மேனகாவிற்குப் பணத்தை அனுப்பினோம். அதன் பிறகுதான் ‘மார்க் ஆண்டனி’ இந்தியில் வெளியானது. இதுபோன்ற ஒரு மோசமான சம்பவத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் எதிர்கொண்டதேயில்லை.
#Corruption being shown on silver screen is fine. But not in real life. Cant digest. Especially in govt offices. And even worse happening in #CBFC Mumbai office. Had to pay 6.5 lacs for my film #MarkAntonyHindi version. 2 transactions. 3 Lakhs for screening and 3.5 Lakhs for… pic.twitter.com/3pc2RzKF6l
— Vishal (@VishalKOfficial) September 28, 2023
நாங்கள் கொடுத்த பணத்திற்கான பரிவர்த்தனை பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறேன். இதை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் எனது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்.
இனி எந்தவொரு தயாரிப்பாளருக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது. யாருக்கும் இனி இதுபோல் நடக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.