மூணாறு: கேரளாவில் தென் மேற்கு பருவ மழையை கடந்த 123 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு மூன்றாவது முறையாக மழை மிகவும் குறைவாக பெய்துள்ளது தெரியவந்தது.
கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்தாண்டு ஜூன் 8ல் பருவ மழை துவங்கியது. மாநிலத்தில் பருவ மழை சராசரி 201.86 செ.மீ. மழை பதிவாக வேண்டும்.
இந்தாண்டு 132.61 செ.மீ. மட்டும் மழை பெய்தது. இது 34 சதவீதம் குறைவாகும். இதற்கு முன்பு 1918லும், 1976லும் மழை குறைவாக பெய்தது. கடந்த 123 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு மூன்றாவது முறையாக பருவ மழை குறைவு என தெரிய வந்தது. இந்தாண்டு மிகவும் கூடுதலாக செப்டம்பரிலும், குறைவாக ஆகஸ்ட்டிலும் மழை பெய்தது. செப்டம்பரில் சராசரி 27.2 செ.மீ. மழை பெய்வது வழக்கம்.
இந்தாண்டு செப்டம்பரில் 41.4 செ.மீ. மழை பதிவானதால் வறட்சி பாதிப்பு சற்று குறைந்தது. சாதாரணமாக ஜூனில் 64.8 செ.மீ. மழை பெய்யும் என்ற நிலையில் இந்தாண்டு 26.03 செ.மீ. மழை பெய்தது. அதேபோல் ஜூலையில் 65.3க்கு பதில் 59.2, ஆகஸ்ட்டில் 44.5க்கு பதிலாக வெறும் 6 செ.மீ. மட்டும் மழை பெய்தது. வயநாடு மாவட்டத்தில் 55 சதவீதமும், இடுக்கி மாவட்டத்தில் 54 சதவீதமும் பருவ மழை குறைவாகும்.
அதேசமயம் மாநிலத்தில் மிகவும் கூடுதலாக இடுக்கி மாவட்டம் பைனாவில் 434.9, கண்ணூர் மாவட்டம் பய்யாவூரில் 410.65, காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரத்தில் 373.77 செ.மீ. மழை பதிவானது. மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை சராசரி அளவை விட குறைவாக பெய்தது. இந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட சற்று கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement