கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரத்தில் கோயில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்காததால் அரசு ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவன், பெருமாள் கோயில்களின் 4 வீதிகள், மணல் மேட்டுத் தெரு, தோப்புத் தெரு, நேதாஜி திடல் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் சுமார் 3 தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் வரிகள் செலுத்தி, மின் இணைப்புகள், ரேசன் அட்டை, ஆதார் அட்டைகள் பெற்று வசித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அறநிலையத் துறையினர், தங்களது துறைக்கு சொந்தமான இடம் என அந்த இடங்களை மீட்க முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியினர் வலியுறுத்தியதின் பேரில், அந்த இடங்களை மீட்கும் பணி தற்காலிகமாக அப்போது ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள சங்க நிர்வாகிகள், தமிழக முதல்வர் உள்பட அனைத்து ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு, பல தலைமுறைகளாக இந்தப் பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்காவிட்டால், இங்கு வசிக்கும் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர், அரசு வழங்கியுள்ள அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தனர்.
ஆனால், இது தொடர்பான எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பத்தினர், திருநாகேஸ்வரம் கடைத்தெருவில் திரண்டு, கையில் அரசு வழங்கிய அனைத்து ஆவணங்கள் மற்றும் பதாதைகளுடன், திருநாகேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க கண்டன முழக்கமிட்டபடி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
இதனையறிந்த கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், திருவிடைமருதூர் டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக் மற்றும் திருநீலக்குடி போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், வரும் 20-ம் தேதி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 20-ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில், பொதுமக்கள், அறநிலையத்துறை, வருவாய்த் துறை ஆகிய முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.