உலக கோப்பை தொடக்கம்
உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா இம்முறை நடத்துகிறது. முதல் போட்டியானது அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின்போதும் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன. தொடக்க விழா பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலைநிகழ்ச்சிகள் ஏதும் இல்லாமல் இந்த உலக கோப்பை போட்டி தொடங்க இருக்கிறது.
ஸ்டார் பிளேயர்கள் சந்தேகம்
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் நட்சத்திர பிளேயர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்குவது சந்தேகம் என கூறப்படுகிறது. தற்போது சிகிச்சையில் இருக்கும் அவர் முழுமையாக குணமடைந்த பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் களமிறக்கலாம் என இங்கிலாந்து அணி முடிவெடுத்திருக்கிறது. அதேபோல் நியூசிலாந்து அணியின் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் கனே வில்லியம்சன் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். காயத்தில் இருந்து குணமடைந்திருக்கும் அவர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடினாலும், உலக கோப்பையை முழுவதுமாக கருத்தில் கொண்டு அந்த அணி இம்முடிவை எடுத்திருக்கிறது.
பகையோடு இருக்கும் கருப்பு படை
கருப்பு படையான நியூசிலாந்து அணி, கடந்த முறை உலக கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த சம்பவத்தை இன்னும் தீரா பகையுடன் மனதில் வைத்திருக்கிறது. ஒரே போட்டியில் இரு முறை டை ஆன போது, பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு சாம்பியன் பட்டம் கொடுக்கப்பட்டது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், இங்கிலாந்து அணி சாம்பியனானதை தடுக்க முடியவில்லை. கடுமையாக போராடி, வெற்றிக்கு மிக மிக மிக அருகில் சென்று தோல்வியடையாமல் இருந்தபோதும், நியூசிலாந்து அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. அந்த பகையுடன் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ள இருக்கிறது.
அகமதாபாத்தில் நியூசிலாந்து வெற்றி
இதற்கு முன்பு இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் 1996 ஆம் ஆண்டு நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. அப்போட்டியில் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. ஏற்கனவே இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய தெம்புடன் நியூசிலாந்து இருப்பதால், அதனை இம்முறையும் தொடரவே பகீரத முயற்சிகளை எடுக்கும். இருப்பினும் இங்கிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. பவுலிங், பேட்டிங் என ஸ்டார் பிளேயர்களை வைத்திருக்கிறது. சரிநிகர் பலத்துடன் இரு அணிகளும் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் இந்த உலக கோப்பை முதல் போட்டியை எதிர்நோக்கி இருக்கின்றனர்.