அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்படும்: கர்நாடக முதல்வர் தகவல்

ஓசூர்: அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்து குறித்து விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க உள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இன்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா,துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது,”அத்திப்பள்ளியில் ஜெயம்மா என்பவருக்கு சொந்தமான இடத்தில் ராமசாமி ரெட்டி என்பவர் பெயரில் லைசென்ஸ் பெற்று பட்டாசு விற்பனை செய்து வந்துள்ளனர். பட்டாசு கடைக்கு கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் இருந்து வாகனங்கள் மூலம் பட்டாசு வந்துள்ளன. அந்த பட்டாசுகளை தொழிலாளர்கள் இறக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெரிய வரவில்லை.

அங்குள்ள மின் ஒயவர்களோ அல்லது யுபிஎஸ் மூலமாகவோ இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம். விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவில்லை. நான் ஆய்வு செய்த வரையில் பட்டாசு கடையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகான பொருட்களும் இல்லை. மேலும் லைசன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதியன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனுடைய காலம் 31.10.2028 வரை உள்ளது. அதற்கு முன்பு 18.1.2021 அன்று ஒரு லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனுடைய காலம் 8. 1. 2026 வரை உள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் இந்த விபத்து குறித்த வழக்கு சிஐடி வசம் ஒப்படைக்க உள்ளோம்” என்று கூறினார். இந்த பேட்டியின் போது, தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், கிருஷ்ணகிரி எம்பி, செல்லகுமார், மேயர் சத்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.