யானைகள் வாழிடத்தில் பலா மரங்களை வெட்டிச்சாய்க்க அனுமதி கொடுத்த வனத்துறை – திடீரென பின்வாங்கியது ஏன்?

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் தனியார் நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. அதுவும் நீலகிரிக்கே உரித்தான Native Tree’s எனப்படும் பூர்வீக மரங்களை வெட்டுவதற்கு எந்த அனுமதியும் கிடையாது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்திகிரி, மாமரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் ராட்சத பலா மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படும் புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதுவும் யானைகள் மற்றும் இருவாச்சி உள்ளிட்ட அரியவகை பறவைகளின் வாழிடத்தில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வெட்டப்பட்ட மரங்கள்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய இயற்கை மற்றும் வனஉயிர் பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஊட்டி சாதிக், “யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் இருக்கும் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி வழங்கியிருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. தனியார் தோட்டமாக இருந்தாலும் யானைகள் கூடும் மிக முக்கிய இடங்களில் ஒன்றாக அந்தப் பகுதி இருக்கிறது. 200 – க்கும் அதிகமான பறவையினங்களும் உள்ளன. இந்த மரங்களை வெட்டுவதால் கடுமையான பாதிப்பை அவற்றுக்கு ஏற்படுத்தும். வனக்குற்றத் தடுப்புப் பிரிவினர் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பலா மரங்கள் வெட்டப்படுவது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், “ஏகப்பட்ட பலா மரங்களை வெட்டி லாரியில் ஏற்றி வருகிறார்கள். இங்கு இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான பலா மரங்களே யானைகளின் முக்கிய உணவாதாரமாக இருக்கிறது. அந்த மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டால் பலா சீசன்களில் யானைகள் ஊருக்குள் வரும் அபாயம் இருக்கிறது” என்றனர்.

வெட்டப்பட்ட மரங்கள்

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதமிடம் பேசினோம், “தனியாருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் உள்ள பல பலா மரங்களை வெட்டுவதற்கான அனுமதியைக் கேட்டிருந்தார்கள். 166 மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி கொடுத்தோம். யானைகள் நடமாடும் பகுதி என்பதால் மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் மரங்களை வெட்ட தற்காலிக தடை விதித்துள்ளோம். கள ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.