Jarvo In Chepauk, IND vs AUS: உலகக் கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. பலரும் எதிர்பார்த்திருந்த இந்த போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் கில்லுக்கு பதில் இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறு நிமிடங்களிலேயே மைதானத்திற்குள் ஒரு பார்வையாளர் ஓடி வந்தார். அவர் வேறு யாரும் இல்லை. இங்கிலாந்தில் பலமுறை மைதானங்களிலுக்குள் ஓடி வந்து உலகம் முழுவதும் வைரலான ஜார்வோதான் இன்று சென்னைக்கும் வந்து, மைதானத்திற்குள் ஓடி வந்துள்ளார். இவர் இங்கிலாந்தில்தான் எளிதாக மைதானத்திற்கு ஓடி வந்துவிடுகிறார் என நினைத்தால், சென்னை சேப்பாக்கத்திலும் மைதானத்திற்குள் ஓடி வந்தது ஆச்சர்யமாக இருந்தது.
விராட் கோலியும், சில இந்திய அணி நிர்வாகிகளும் ஜார்வோவை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். இருப்பினும், வீடியோ ஏதும் வெளியாகாத நிலையில், சில புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் 69 என்ற எண்ணிடப்பட்ட இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து மைதானத்திற்குள் ஓடி வந்துள்ளார்.
ஜார்வோ என்றழைக்கப்படும் இவரது இயற்பெயர் டேனியல் ஜார்விஸ். இவர் இங்கிலாந்தின் பிரபலமான யூ-ட்யூபராக அறியப்பட்டார். ஆனால், பின்னர் அடிக்கடி இங்கிலாந்தின் மைதானத்திற்குள் ஓடி வந்ததன் மூலம் உலகம் முழுவதும் வைரலானார். முதல்முறையாக இப்போது இங்கிலாந்திற்கு வெளியே மைதானத்திற்குள் வந்துள்ளார். அத்தனை பாதுகாப்பு அம்சங்களையும், கூண்டுகளையும் தாண்டி அவர் எப்படி மைதானத்திற்குள் வந்தார் என்பது மிக மிக ஆச்சர்யமாக உள்ளது.
Jarvo is back on the field. Security kahan hay bhai? #CWC23 #WorldCup2023 pic.twitter.com/AGRrkpSBPL
— Farid Khan (@_FaridKhan) October 8, 2023
ஜார்வோ முதன்முதலில் 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடரின் போது மைதானத்திற்குள் ஓடிவந்து பிரபலமானார். அவர் அப்போது ஒருமுறை இல்லை மூன்று முறை பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் ஓடி வந்தார். முதலில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் அவர் இந்த செயலில் இறங்கினார். அதன்பின் லீட்ஸ் டெஸ்ட்டின் போது, விராட் கோலி பேட்டிங்கிற்கு வரும் சமயத்தில், இவர் இந்தியன் டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து மைதானத்திற்கு இறங்கியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்பின், ஓவல் மைதானத்தில் இவர் இந்திய ஜெர்ஸியை அணிந்து ஓடி வந்தபோது, ஜானி பேர்ஸ்டோவ் இவர் கீழே தள்ளிவிட்ட சம்பவம் நடந்தது. கிரிக்கெட் மட்டுமின்றி, கடந்தாண்டு கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் ஜெர்ஸியை அணிந்து மைதானத்திற்குள் புகுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IND vs AUS: சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா! இந்திய முறியடிக்குமா?