நடிகை நயன்தாரா, அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார்.
இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ’பைஜு பாவ்ரா’ படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சினிமா துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் நயன்தாரா சமீபத்தில் சர்வதேச பத்திரிகை ஒன்றுடனான நேர்காணலில் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

“இந்த சினிமாத் துறை மற்றும் எனது ரசிகர்கள் எனக்கு வழங்கிய பதவியும், திரைத் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து நான் பெற்ற அன்பான மரியாதையும் எனது மிகப்பெரிய சாதனையாகும். நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறேன். ரசிகர்கள், நடிகர்களின் முக மதிப்பைப் பார்த்து மதிப்பிடுவதில்லை. பதிலாக முக்கியமான கதாபாத்திரங்களில் அவர்கள் நடிப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். தற்போது பெண்கள் பலத்துறைகளில் தேர்ச்சிப் பெற்று இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பெண்களுக்கான முன்னுரிமைகள் நல்ல சிந்தனையுடன் சீரமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்திருக்கிறார்.