தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாகச் சில அறிவுரைகளை வழங்கித் தெளிவுபடுத்தியுள்ளது.
அதில், ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாள்களுக்கு அதாவது, 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மட்டுமே அனுமதி. அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும். காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

காலை 7 மணி அல்லது 8 மணிக்குச் சிறப்புக் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விடுமுறை நாள்களிலும் 9 மணிக்குத்தான் முதல் காட்சி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்குத் தொடர்ந்து ஆதரவளித்துப் பேசி வரும் ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யின் ‘லியோ’ படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாதது குறித்து தி.மு.க அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ளார் அவர், ”‘லியோ’ படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று சொல்வதே ஒரு அரசியல்தான். இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கவில்லை? திரையரங்குகளுக்குத் தனியாகக் காவலர்கள் பாதுகாப்பு எல்லாம் தேவையில்லாத வேலை. இதேபோல ஏன் ‘ஜெயிலர்’ படத்துக்குச் செய்யவில்லை? தி.மு.க அரசு வேண்டுமென்றே விஜய்யைத் தொந்தரவு செய்வது வெளிப்படையாகத் தெரிகிறது.
இதற்கு முன்பு வெளியான விஜய் படங்களுக்குக் கூட இவ்வளவு நெருக்கடி இல்லை. அதுதான் சந்தேகத்தைத் தருகிறது. சினிமா வியாபாரம் பெருகிவிட்ட நிலையில், சிறப்புக் காட்சிகள் இருந்தால்தான் லாபம் கிடைக்கும். ஆனால், அதை ஒழுங்குபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் எங்களுடைய ஆட்சி வரும்போது அதை நாங்கள் சீரமைப்போம்” என்று கூறியுள்ளார்.