சென்னை: இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக 28 தமிழர்கள் சென்னை, கோவைக்கு நேற்று வந்தனர்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. கடந்த 13-ம் தேதி 21 தமிழர்கள் உட்பட 212 பேர் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். டெல்லியில் இருந்து 14 பேர் சென்னைக்கும், 7 பேர் கோவைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீண்டும் இஸ்ரேலில் இருந்து நேற்று அதிகாலை 235 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர் 28 பேர். பின்னர் 2 குழந்தைகள், 9 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் இரு விமானங்களில் டெல்லியில் இருந்து சென்னைக்கும், 12 பேர் கோவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல அரசு தரப்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சென்னைக்கு வந்த 16 பேரை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அயலகத் தமிழர் நலத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.