ஜெனீவா: கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனையில் இருந்து இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீதுஇஸ்ரேல் போர் தொடுத்தது. காசா மீது ஒரு வாரமாக வான்வழிதாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக, மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. அலுவலகம் (ஓசிஎச்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காசா பொதுப்பணி அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி இஸ்ரேல் தாக்குதலில் வசிப்பிடம் மற்றும் வசிப்பிடம் இல்லாத 1,324 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த கட்டிடங்களில் இருந்த 5,405 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 3,743 வீடுகள் சீரமைக்க முடியாத மற்றும் வசிக்க முடியாக அளவுக்கு சேதம் அடைந்துள்ளன. இதுதவிர 55,000 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன.
காசாவின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எவ்வளவு பேர் இடம் பெயர்கின்றனர் என்பதை ஐ.நா. கண்காணித்து வந்தது. இதில் வியாழக்கிழமை இறுதியில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 4,23,000 ஆக இருந்தது.
வடக்கு காசாவில் இருந்து வாகனங்களில் மக்கள் இடம் பெயரும் போது விபத்துகள் ஏற்பட்டு40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் சுமார் 150 பேர் காயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் பலர் இடம்பெயர்வதை கைவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.