ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக தங்கள் சொந்த கிராமத்தில் வாக்களிக்க உள்ளனர்.
ஐந்து மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் சத்தீஸ்கரில் மட்டும் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7-ல் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன. தெற்கு சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிராந்தியம் மாவோயிஸ்ட் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதியாகும். இப் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் உள்ளன.