சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அர்ஜென்டினா அணி 20 ஓவரில் 427 ரன்களைக் குவித்து உலக சாதனைப் படைத்திருக்கிறது.
ஆடவர் கிரிக்கெட்டை போல, மகளிர் கிரிக்கெட்டும் மக்களிடையே தற்போது கவனம் பெற்று வருகிறது. வீரர்களைப் போல வீராங்கனைகளும் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை சமீபத்தில் புரிந்து வருகின்றனர். அர்ஜென்டினாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சிலி அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி, நடந்து முடிந்துள்ளது. அதில், முதலில் களமிறங்கிய அர்ஜெண்டினா அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 427 ரன்களை குவித்து வரலாறு சாதனை படைத்திருக்கிறது. இந்த இன்னிங்ஸில் அர்ஜெண்டினா ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பதுதான் அனைவரையும் வியக்க வைக்கும் சாதனையாக இருக்கிறது.
லூசியா டெய்லர் எனும் வீராங்கனை 84 பந்தில் 169 ரன்களும், அல்பர்ட்டினா காலென் 84 பந்தில் 145 ரன்களும், மரியா 16 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர். சிலி தரப்பில் அவர்களின் பந்துவீச்சாளர்கள் மொத்தமாக 73 எக்ஸ்ட்ராக்களை கொடுத்திருந்தனர். இதில் 64 நோ பால்களும் அடங்கும். சிலி அணியின் ஃப்ளோரன்ஸியா மார்ட்டினஸ் ஒரே ஓவரில் 52 ரன்களையெல்லாம் கொடுத்திருந்தார். அர்ஜென்டினா அணி 20 ஓவரில் 427 ரன்கள் குவித்தது.

அதைத் தொடர்ந்து சேஸிங்கை தொடங்கிய சிலி அணி 15 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்து 364 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் அர்ஜென்டினா மகளிர் கிரிக்கெட் அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் எந்த அணியும் இத்தனை ரன்களை எடுத்ததே இல்லை. இந்த சாதனையை தகர்ப்பது மிகவும் கடினம் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.