காசாவாசிகளுக்கு எல்லைகளை நீங்கள் மூடுவது ஏன்?- அரபு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே கேள்வி

வாஷிங்டன்: காசாவிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தவிக்கும் சூழலில் அரபு நாடுகளான கத்தார், ஜோர்டான், லெபனான், எகிப்து ஏன் எல்லைகளை மூடிவைத்திருக்கின்றன என்று அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் நிக்கி ஹாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குபகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 2,300 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே இன்று 10வது நாளாக போர் நடக்கிறது. இதுவரை காசாவில் 2700 பேர் உயிரிழந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “இஸ்ரேல் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி லட்சக் கணக்கான காசாவாசிகள் அண்டை நாடுகளில் தஞ்சம்புகு விரும்புகின்றர். இந்த வேளையில் பாலஸ்தீன மக்கள் மீது நாம் அக்கறை கொள்ள வேண்டும். அவர்கள் அப்பாவிகள். இந்தப் போரை அவர்கள் கேட்கவில்லை.

ஆனால், அவர்கள் வேதனையில் உள்ளபோது அரபு நாடுகள் என்ன செய்கின்றன? உதவிக்கு வராமல் அவை எங்கே இருக்கின்றன? கத்தார் எங்கே? லெபனான் எங்கே? ஜோர்டான் எங்கே? எகிப்து தான் எங்கே? எகிப்துக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலர் நிதியுதவி செய்கிறது. ஆனாலும்கூட அவர்கள் ஏன் பாலஸ்தீனியர்களை ஏற்றுக் கொள்வதில்லை.

எகிப்து ஏன் பாலஸ்தீனியர்களை மறுக்கிறது என்றால் அவர்களுக்கு இவ்விவகாரத்தில் நுண்ணிய முடிவை எடுக்க இயலவில்லை. தங்கள் அருகில் ஹமாஸ் இருப்பதில் எகிப்துக்கு விருப்பமில்லை. அப்படியிருக்கையில் இஸ்ரேல் மட்டும் எப்படி ஹமாஸ் தங்கள் அருகில் இருப்பதை விரும்பும். நாம் இவ்விவகாரத்தை நேர்மையுடன் அணுகுவோம்.

எகிப்து மட்டுமல்ல எந்த அரபு நாடும் பாலஸ்தீனியர்களுக்கு உதவவில்லை. ஏனெனில் அவர்களுக்கு யார் சரி, யார் தவறு, எது நல்லது, எது கெட்டது எனத் தெரியவில்லை. அதனால் அதை தங்கள் நாட்டில் தாங்க அவர்கள் தயாராக இல்லை” என்று கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்க நினைப்பது மிகப் பெரிய தவறாக முடியும் என்று எச்சரித்துள்ள சூழலில் அதிபர் வேட்பாளரும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.