நிலைக் கட்டணத்தை குறைக்க வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்.10-ம் தேதி தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியது. இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் 430 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைக் குறைக்க வேண்டும். அதேபோல், உயர்த்தப்பட்ட 25 சதவீத பீக் ஹவர் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
மேலும், சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க் கட்டணத்தை குறைக்க வேண்டும், 12 கி.வாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ என்ற அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.
இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழக முதல்வர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண முறைகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் சென்னை கிண்டியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கோரிக்கைகள் குறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
ஆனால், அவர்கள் உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சென்னையில் இன்று (அக்.16) உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றன.
இதுகுறித்து, சென்னை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரகுமார் கூறும்போது, எங்களது 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். அமைச்சர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை (இன்று) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை.