வடக்கு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை சாத்தியமாக்கியது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, விரைவில் சரக்கு கப்பல் சேவையும் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வருகை தந்த முதலாவது பயணிகள் கப்பலை வரவேற்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காங்சேன்துறையில் குறித்த வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்;தினை வந்தடைந்ததும் கலாசார நிகழ்வுகளுடன் கப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் வரவேற்கப்பட்டனர். அத்துடன், அமைச்சர்களான நிமால் ஸ்ரீபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பயணிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். அதேபோன்று இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றிருந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இன்றைய முதல் நாள் சேவையினை சத்ரபதி என்ற பயணிகள் கப்பல் வழங்கியிருந்த நிலையில், ஆரம்ப தினமான இன்று இன்று பயணிகளுக்கான கட்டணத்தில் 75 சதவீத சலுகை கழிவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார், 37 பயணிகள் காங்கேசன்துறையில் இன்றைய தினம் நாகபட்டினத்திற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.